Showing posts with label விமர்சனம். Show all posts
Showing posts with label விமர்சனம். Show all posts

Tuesday, 30 October 2012

அய்யா அமானுஷ்யபுத்திரருக்கு





போய்யா போ

நான் ஒரு கெட்டவன்
நான் பீடி பிடிப்பவன்
            நான் ஒரு கெட்டவன்
நான் இலைச்சுருள் பிடிப்பவன்
நான் ஒரு கெட்டவன்
நான் ஒரு சிகரெட் பிடிப்பவன்
நான் ஒரு கெட்டவன்
நான் பில்டர் சிகரெட் பிடிப்பவன்
நான் ஒரு கெட்டவன்
நான் பில்டர் கிங்ஸ் பிடிப்பவன்
நான் ஒரு கெட்டவன்
நான் சுருட்டுப் பிடிப்பவன்
நான் ஒரு கெட்டவன்
நான் பைப் பிடிப்பவன்
நான் ஒரு கெட்டவன்
நான் மூக்குப்பொடி போடுபவன்
நான் ஒரு கெட்டவன்
நான் வெற்றிலை பாக்கு போடுபவன்
நான் ஒரு கெட்டவன்
நான் புகையிலை போடுபவன்
நான் ஒரு கெட்டவன்
நான் ஜர்தா பீடா போடுபவன்
நான் ஒரு கெட்டவன்
உள்ளாடையும் பனியனும் அணிபவன்
நான் ஒரு கெட்டவன்
நான் பேண்டும் ஷர்ட்டும் அணிபவன்
நான் ஒரு கெட்டவன்
நான் காரில் போகிறவன்
நான் ஒரு கெட்டவன்
நான் டாக்ஸியில் போகிறவன்
நான் ஒரு கெட்டவன்
நான் ஆட்டோவில் போகிறவன்
நான் ஒரு கெட்டவன்
நான் சைக்கிள் ரிக்‌ஷாவில் போகிறவன்
நான் ஒரு கெட்டவன்
நான் சைக்கிளில் போகிறவன்
நான் ஒரு கெட்டவன்
நான் பேருந்தில் போகிறவன்
நான் ஒரு கெட்டவன்
நான் நடந்து செல்பவன்
நான் ஒரு கெட்டவன்
நான் ராஜ பவனத்தில் இருப்பவன்
நான் ஒரு கெட்டவன்
நான் அரச மாளிகையில் இருப்பவன்
நான் ஒரு கெட்டவன்
நான் ஈன்ற மாளிகையில் இருப்பவன்
நான் ஒரு கெட்டவன்
நான் ஈன்ற ப்ளாட்டில் இருப்பவன்
நான் ஒரு கெட்டவன்
நான் வாடகை பிளாட்டில் இருப்பவன்
நான் ஒரு கெட்டவன்
நான் ஒண்டுக் குடித்தனக்காரன்
நான் ஒரு கெட்டவன்
நான் சேரியில் வாழ்பவன்
நான் ஒரு கெட்டவன்
……………………………

யார் கெட்டவன்
யார் நல்லவன்

அவ்வளவுதானே
கெட்டவன் நல்லவன்
நல்லவன் கெட்டவன்.


அய்யா அமானுஷ்ய மாட்டுத்தலையரே மனுஷ்யபுத்திரனின் கவிதைகள் இப்பொழுது நித்தமும் சுற்றிச் சுழல்வது ஆத்மநாம் கவியுலகின் அடிப்பரப்பிலய்யா. ஒரு கள்ளப் பூனையை நான் சுற்றி விளக்க  வேலை செய்ய வேண்டுமாவென யோசித்தேன்.

இந்தச் செறுப்பைப் போல்
எத்தனைப் பேர் தேய்கிறீர்களோ
இந்தக் கைக்குட்டையைப் போல்
எத்தனை பேர் பிழிந்தெடுக்கப்படுகிறார்களோ
இந்தச் சட்டையைப் போல்
எத்தனை பேர் கசங்குகிறார்களோ
அவர்கள் சார்பில்
உங்களுக்கு நன்றி
இத்துடனாவது விட்டதற்கு

இது முதல் தொடங்கி அவர் பின்பற்றி அடியொற்றி வந்த அவர் அது குறித்து எங்காவது சொல்லியிருக்கிறாரா அமானுஷ்ய புத்திரரே.சொல்லுங்கள். நீங்கள் அவரது வெறிகொண்ட ரசிக ஆத்மா என நினைக்கிறேன்… இப்படியே நிறைய அள்ள அள்ளக் குறையாத செல்வமாய் அவரின் கவிதைகளை பொங்கி வரும் காவேரியாய் கொத்திக் குதறிக்கொண்டு போன உங்கள் ம.புவின் கவிதைத் தொனித் திருட்டைச் சொல்லிக்கொண்டு போகலாம் அய்யா.


கடவுளைக் கண்டேன்
எதையும் கேட்கவே தோன்றவில்லை
அவரும் புன்னகைத்துப்
போய்விட்டார்
ஆயினும்
மனதிலே ஒரு நிம்மதி

என்ற வார்த்தைகளின் பின்னால் உயிர்ப்புற்று விளங்கும் கவிதையின் ஆழ்மனதைத்தான் இப்பொழுது கள்ளச் சந்தியில் வரிகளாகவும் தொனிகளாகவும் பிய்த்து பிய்த்து விற்று வருகிறார். இன்னும் சொல்லலாம் அமானுஷ்ய புத்திரரே..

இந்தப் பேனா ஒரு ஓவியம் வரையக்கூடும்
                        ஒரு கட்டிட வரைபடத்தையும்
ஒரு சாலை விவரக் குறிப்பையும்
ஒரு பெண்ணுக்கு காதல் கடிதத்தையும்
ஒரு அலுவலகத்தின் ஆணைகளையும்
இவை யாவும் இப்பொழுதைக்கு இல்லை

………………….
…………………

அய்யா அமானுஷ்யம்…நீங்கள் பதில் சொல்லுங்கள் அய்யா. கொந்தளித்து குமுறிய உங்களது கவிஞர் ம.பு.பதில் சொல்லுவாரோ…

எங்கோ பார்த்த முகம்
எங்கோ பார்த்த கண்கள்
எங்கோ கேட்ட ஒலி
எல்லாம் எங்கோ
எங்கெங்கோ


அய்யா அமானுஷ்யம்…புரிகிறதா அவர் என்ன மாதிரியான வரிகளையும் தொனிகளையும் கவிதையின் சரக்கையும் கைமாற்றுகிறார் என்று. அய்யா இபொழுது ஆத்மநாமை எடுத்து வாய் விட்டுப் படியுங்கள். அவரது சொற்கள் சப்தங்களாய் உங்கள் காதில் விழும்போது நீங்கள் அடையும் அனுபவத்தை சொல்லில் விளைந்த அந்த சொர்க்க அற்புதத்தை பதிலாய்ச் சொல்லுங்கள். அப்படியே ம.பு வின் செயற்கையான சத்தத்தையும் நீங்கள் காதுகளை மூடிய அனுபவத்தையும் சொல்லுங்கள். காத்திருக்கிறேன்.

ஐயோ

சொன்னால் மறக்கிறார்கள்
எழுதினால் நிராகரிக்கிறார்கள்
தாக்கினால் தாங்குகிறார்கள்
சும்மா இருந்தால் தாக்குகிறார்கள்
அற்புத உலகம்
அற்புத மாக்கள்….

அய்யா அமானுஷ்யம் சிந்திப்பீர்!!! செயல் புரிவீர்.!!! நிந்தை மறந்து, சிந்தை மறக்காது  நித்தமும் வாசியுங்கள். புத்தம் புது பூக்கள் மலரட்டும் நித்தம் நூறு புன்னகை மலரட்டும்.

அன்புகனிந்த
தீர்த்த முனி.

Saturday, 27 October 2012

முகநூல் கவிஞருகளுக்கு.







நான் கவிதை குறித்துப் பேசிய வரையில் முகநூல் கவிஞர்களின் ஓலம் பெருகிவிட்டது.  நீங்கள்கவிஞரா அய்யா  என்ற கேள்வியைக் கேட்டாலே கண்ணீரோடு பதட்டமும், நீங்கள் எழுதியது கவிதையா அய்யா என்று கேட்டால் உளறிக்குழறிப் பம்மும் நிலைக்கும் அது சென்றுவிட்டது. இவர்களிடம் பேசவே எனக்கு பரிதாபமாக இருக்கிறது.எனது விமர்சனச் சுட்டலை  கொஞ்ச நாளைக்கு ஒத்திப் போடுகிறேன். வணக்கொம்...கவிஞக் கண்மணிகளே....வணக்கொம்...எப்படியும் திரும்பி வர  மூணுமாசம் ஆகும்னு நினைக்கிறேன்..பொத்தகத் திருவிழாவுல கவிஞருங்க முகத்தையெல்லாம் முகநூல்ல போட்டிருக்கிற போட்டோ மாதிரி பேனா நோட்டோட இருக்குதான்னு பார்க்க ஆவலா காத்திருக்கேன்…

அய்யா வந்தனமாம் வந்தனம்
வந்த கவியெல்லாம் குந்தனும்
நான் வரும்போது வாங்கியாந்தேன்
நல்ல நல்ல விமர்சனம்
அய்யா கவிகளே
வந்தனமய்யா வந்தனம்.

வணக்கம் நமஸ்காரம்,ஸ்வாகதம்
கும்புடுறேன் சாமி.
போய்த்தொலைகிறேன்.


அன்பு கனிந்த
- தீர்த்தமுனி

Tuesday, 16 October 2012

நவீன கவிதையைப் புரிந்து கொள்ள.




நவீன கவிதையில் ஒழுங்கற்ற வாக்கிய அமைப்புகளின் மூலமாக சேதி சொல்லும் கவிஞர்களை நாம் கண்டுணர்வோம். தற்சமயம் அவர்களின் கவிதைகளில் தெரியும் மைய இழையின் புதிர்ப்பாதையை அவிழ்க்கலாம் வாசகர்களே. கவிதைக்கான கச்சாப் பொருட்களாக கவிதை இயங்கும் தளத்தை சற்று குறுக்காக வெட்டிப் பார்க்கலாம்.

முதலில்:
நவீன கவிதை தன் ஆரம்பவரியிலிருந்து இயக்கும் பொருட்களாக இவைகளே உள்ளது.கவிதையின் உள்ளார்ந்த அனுபவம் எழுதும் மனநிலைக்குச் சொந்தக்காரரானான ஒரு மனிதரின் மூளையிலிருந்தே பிறக்கிறது. தனிமனிதர் என இங்கு எவருமில்லையாதாலால் கவிதை பொதுவாகவே சமூகத்தன்மை கொண்டதாக இருக்கிறது..

கவிதையின் பாடுபொருளையும் அதன் உத்தியையும் பொறுத்து நவீன கவிதையின் ஏழு கோணங்கள் அல்லது கோணல்கள்.

1 வக்கிரம், இருண்மை, படிமம்

2 முழக்கம், அரசியல், ஆரவாரம்,

3 சமூகவுணர்வு, விமர்சனம், சமூக மாற்றம்

4 தனிமனிதக் கழிவிரக்கம், நம்பிக்கை வறட்சி, அந்நியமாதல்

4 மிதப்பு, நழுவல். எதிலும் ஒட்டாப்பண்பு

6 பாசாங்கு அறியாமை, வெகுளித்தனம்

7 தன்முனைப்பு அகங்காரம் அலட்சியம்


கவிதையின் மொழித்தளம் என்பதைப் பொறுத்த அளவில்  கவிதைப் பரப்பில் விளையாடும் சதிர்கள்

1. சொற்களைச் செதுக்குதல், வடமொழிச் சொற்களை வலியத்திணித்தல்.

2 .வரிகளை அடுக்குவதிலும், வாக்கியங்களை அமைப்பதிலும்
   வித்தியாசங்கள்,  கவனமும் கவனமின்மையும்.

3 . விடுகதைப்பாணி, திடீர்ச்சுழற்சி,

4 . படிமங்கள், உருவகங்கள், தொன்மங்க.ள்

5. உரைநடையின் நேரடித்தாக்கம்.

6 சந்தம், நாட்டுப்புற பாடலின் சாயல்.


இதுவே நவீனம் எனச் சொல்லி கவிதைகள் தன் வார்த்தைகளுக்குள் ஒளித்துவைத்துள்ள உணர்ச்சிகள். இவைகளை வைத்து கோலி விளையாடும் கவிதைகளை நாம் உணரமுடியும்.  இவைகள் குறித்து வாசகர்கள் சற்று சிந்திக்க வேண்டும்.

பிள்ளைப் பாசம்,
தாய்ப்பாசம்,
இயற்கையை வருணித்தல் என இன்னும் சில சுமைத்தாங்கிக் கவிதைகளையும் கவிஞர்கள் ஆற்றிவருகிறார்கள். விலை போனவைகள், விற்பவைகள் என நிறைய கவிஞர்கள் எழுதியும் வருகிறார்கள். கவிதையின் தன்மைகள் குறித்து வாசகர்கள் சற்றே உரத்த சிந்தனையோடு  சிந்தித்துப் பார்க்க வேண்டும். இங்கு குறிப்பிட்டுள்ள உணர்ச்சிமையங்களைத் தாண்டி ஒரு கவிதை இயங்குமாயின் அது குறித்து  நாம் சற்று கவனமாகப் பேசுவோம் கண்மணிகளே.

சிந்திப்போம் கண்மணிகளே….

Thursday, 11 October 2012

அய்யா ஆதிரன் அவர்களுக்கு....





 அய்யா ஆதிரன் அவர்களுக்கு எனது மனங்கனிந்த வாழ்த்துக்கள்.


நான் யாரைத் தீர்த்த முனி..

முக நூல் கவிஞர்களின் கட்டுப்பட்டித் தனமான அகந்தையை நோண்டிவிட்டதற்காக. விமர்சனம் என எதையும் தாங்கவொண்ணா அவர்களின் பலவீனத்தையும் அதன் மூலமாக அவர்களது பயங்கரவாதத்தனத்தை எடுத்துக்காட்டியதற்கும். அய்யா இவற்றையும் சில ஊளைகளையும் தீர்த்து உம் கேள்வியில் உள்ள சந்தேங்களைத்தீர்க்க வந்த, சற்றும் அதிகமாகத் தீரத் தெரிந்த தீர்த்தமுனி.

1 நீங்கள் கவிதை விமர்சகரா?
ஆம்

2 நீங்கள் கவிஞரா?
ஆம்

3 அல்லது இரண்டும் கலந்த பிறவியா?
ஆம்

4 நீங்கள் வாசகரா?
ஆம்

5 நீங்கள் பதில் சொல்லவேண்டும் என்பதற்காக அல்ல இந்த கேள்விகள். நான் பதில் சொல்வதற்கு.
இருந்தாலும் பரவாயில்லை அய்யா, பதில் சொல்லியிருக்கிறேன்.

6 நீங்கள் கவிதை விமர்சகரா?
ஆம்.
அய்யா எழுதிய கவிதைக்கு கவிஞரே உளறுவாய்த்தனமாக கோனார் நோட்ஸ் போடுகையில் இப்படி ஆகிவிடுகிறது. ஆரம்பத்திலிருந்து கவிதையை உணரத்தோதான சில குறியீடுகளைச் சொன்னேயொழிய கவிதை இதுதான் எனச் சொல்லும் முக்காலம் உணர்ந்த முனியல்ல இந்தத் தீர்த்தமுனி.
அய்யா கவிதையை எது கவிதையாக தீர்மானிக்கிறதோ அந்த தன்மையிலிருந்தே நான் உரைகல்லை உருவாக்குகிறேன். உரைகல்லும் உராசும் பொருளும் கவிதையிலேயே இருக்கிறது. மார்கிசிய உரைகல் என்பதை பாசாங்காகக் கொள்ள வேண்டியதில்லை என நினைக்கிறேன். ஒரு காரணமாய் தங்களை இத்தனை கேள்விகள் கேட்கவைத்த அந்த உரைகல்லை தீப்பொறிபறக்க உரசிப்பார்க்கலாம். இல்லை அண்டாக்கா கசம் அபூக்கா குசம் என பாறாங்கல்லை உருட்டியும் பார்க்கலாம்.


கடற்கன்னி.

அந்த எல்லா மனிதரும் உள்ளேயிருந்தனர்
நிர்வாணமாக அவள் நுழைந்த போது
அவர்கள் குடித்துக்கொண்டேயிருந்தனர்
அவள் மீதி காறித்துப்ப ஆரம்பித்தனர்
அண்மையில் நதியில் இருந்து வந்த அவள்
ஒன்றையும் புரிந்துகொள்ளவில்லை
வழியைத் தொலைத்துவிட்ட அவள் ஒரு கடல்கன்னி
அவளின் பளபளக்கும் தசையில் வசவுகள் வழிந்தோடியது
அவள் பொன்னிற மார்பினை, கீழ்மை நனைத்தது
அவள் அழவில்லை, கண்ணீர் துளிகளுக்குப் புதியவளானதால்
அவள் அணிந்திருக்கவில்லை ஆடைகளுக்கு அந்நியமானவளானதால்
சிகரெட் நுனிகளாலும் எரிந்த தக்கைகளினாலும் அவர்கள்
அவளுக்குத் தழும்பேற்றினார்கள்
சிரிப்புடன் அருந்தகத்தின் தரையில் அவளை உருட்டினார்கள்
அவள் பேசவில்லை பேச்சென்பதை அவள் அறியாததால்
அவள் விழிகள் தொலைதூரத்து அன்பின் நிறமாக்
அவள் புஜங்கள் புஷ்பராகத்திற்கு ஒத்திருந்தன
பவழஒளியில் அவள் உதடுகள் அசைந்தன
சப்தமின்றி அவள் வெளியேறினாள் கடைசியில்
அந்தக் கதவு வழியாக
நதியைச் சென்றடையுமுன்னரே
அவள் தூய்மையாகிவிட்டாள்
மழியில் நனைந்த வெள்ளைக் கல் போல
மீண்டுமொருமுறை
மின்ன
நீந்தினால் மற்றுமொருமுறை திரும்பிப்பாராமல்
சூன்யத்திற்குள்
அவளுடைய மரித்தலுக்கு நீந்தினாள்.

அய்யா இக்கவிதையை நீங்கள் விமர்சனத்துக்கு அடியில் வைத்துத் தேய்த்த உரைகல் இப்படி வாழைப்பழத் தோலாக மாறக்கூடாது. அய்யா அந்த சிறுவர்களின் கவிதைகளை சிறு கேள்வி கேட்டதற்கு, உரைகல் லோடை ஏற்றி வந்த உங்களது லாரியை இங்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறீர்கள். அய்யா….அந்தக் கவிதை…அதுதான் அந்த கடல் கன்னி. அய்யா இங்கு ஒரு ஜிக்ஜாக் உள்ளது. இந்தக்கவிதையில் உள்ள ஜிக்ஜாக் ஒரு வாசகக்குசும்புக்கு விடப்பட்ட சவால் அய்யா. ஒரு கேள்வி எனத் தொடங்கி எனது விளக்கங்களைச் சொன்னதும் அவர்கள் குந்திக் குமுறி, என் இல்லக்கிழத்தி வரை கவிதையைத் தரதரவென இழுத்துச் சென்றார்கள். அய்யா அந்த ஜிக்ஜாக்கையும் நான் சொல்லிவிடுகிறேன். அந்தக் கவிதையின் முழுத்தலைப்பு இதுதான். கடல்கன்னி குடிகாரர்கள் கதை. கவிதையை எளிமையாக எழுதாமல் பு- நாவுக்கு பூனாப் போட்டு சூ நாவுக்கு சூனாப் போட்டு எழுதியது  தீர்த்த முனியல்ல. இன்றளவும் பொங்கிவரும் காவேரியாம் திருவாளர் பாப்லோ நெரூதா வுடையது. அய்யா இந்தக் கோமாளிக் கூத்துக்களுக்கு நெரூதாவை உடைத்துப் போடும் நீர் யார் பெருங்கோமாளியா அய்யா. சிந்திக்கும் செயலை எழுதியப் பெண்மணியைத் தேடிய நீர், சிந்த்திப்பவனின் குதத்தைக் குறிவைக்கும் கவிஞக்கண்மணியையும் தேடிப்பார்த்திக்கலாம்,. அய்யா யப்பானிய வடிவமான ஹைகூ விற்கும் வெண்பாக்கள் போல இலக்கணம் உண்டு என்கிற ராஜசுந்தர்ராஜனுக்கும் நேரடி பதில் இருக்கிறதென்றால் இருக்கிறது. கேட்டால் கொஞ்சம் வெட்கமாக இருக்கும் பரவாயில்லையா… அய்யா வெண்பா ஒரு கற்றுக்கொள்ளும் திட்டம் என்றால் அந்த வெண்பாவுக்கும், பொங்கலுக்கும் உரைகல் இலக்கணம் என்றால் கவிதைக்கு அங்கு என்ன உரைகல் என்று  கேட்டிருக்கலாம். பெரியவர். ஏதோ ஹைகூக்கு இலக்கணம் இருக்கிறதென்றால் இங்குள்ள கவிதைகளுக்கு இலக்கணம் எதுவய்யா. நேரடியாக உங்களுக்குப் பதில் தந்துவிட்டேன். நீங்கள் அங்கு சென்று உசாவலாம்.

//படிக்கிற கவிதையின் படைப்பாளியின் அனுபவத்தை ஒரு வாசகர் நேரடியாக பெறும்பொழுது அவருக்கு கவிதை மீதான விமர்சனம் தேவையற்றுப் போகிறது.//

 அய்யா இது அப்படியா அய்யா. இல்லை அய்யா இது அண்டப்புளுகுணிகள் ஆகாசப் புளுகுணிகள் தாங்கள் மட்டுமே புரிந்துகொண்டதாக உளறிவைத்த வேலை. இன்னும் சொன்னால் பெருந்திட்டமய்யா பெருந்திட்டம்.

அய்யா…கவிதைக்கூறில் ஏகப்பட்ட நுழைபுலன்கள் உள்ளதய்யா கவிதையை அணுக நாம் கொள்ல வேண்டியதென பல உள்ளதய்யா. ஏனென்றால் கவிதை தன்னளவில் பெரும்பேறு கொண்டதல்லவா,

அய்யா….கவிதையை அணுக நாம் கைக்கொள்ள வேண்டிய முறைகளாவன…

விளக்க முறை
ஒப்பீடு
மதீப்பீடு
ரசனைமுறை
பாராட்டு முறை
முடிபுமுறை
விதிமுறை
படைப்பு நிலை
பகுப்பு நிலை

இவைகளோடு
அதை ஆய்ந்தகன்று உள் செல்ல
சமுக வய
இன்னும் வரலாற்றிய
உளவியல் முறையிலான அதற்கடுத்து
மொழியியல் அணுகுமுறையோடு
கவிதையின் உருவவியலோடு,
அதன் அமைப்பியலோடு, பின்னதாக வந்த பின்னை அமைப்பியலோடு, பின் நவீனத்தோடு
அறநெறிச்சாரத்தின் மையத்தோடு
தொல்படிவ அணுகுமுறையோடு
இலக்கியவகையியலோடு
இன்னும்
தத்துவத்தோடு
இப்பொழுது நொங்கெடுத்து சில பலரைக்
கிண்டிக் கிழங்கெடுக்க வந்த
சமகால தலித் மரபோடு

உங்களது பாணியில் காமெடியாகச் சொன்னால் மார்க்சிய இயங்கியலோடும் உரைத்துப் பொருள் கூறலாம். ( இங்கேயும் சிக்கல் உள்ளது. எச்சரிக்கை.)

மாபெரும் முனிகளான தெரிதாவும் பூக்கோவும் சசூரும் பைத்தியங்கள் இல்லை அய்யா, மொழிக்கு வைத்தியம் பார்க்க வராது வந்த மாமுனிகள்..

பாட்டு நினைவுக்கு வருகிறதா
ஒன் டூ த்ரீ…ஸ்டார்ட்…

பிரெஞ்சு மலை மாமுனியே தெரிதா ய்யா
சார்த்தரின் குணங்க்காக்கும் பூக்கோய்யா
நீட்ஷேயா..யீய்யா
பிரெஞ் மலை மாமுனியே சார்த்தரையா…

பூக்கோவின் குங்குமம்
தெரிதாவின் சந்தனம்
ஜகஜகஜகஜகஜகஜக…

சார்த்தரின் இருத்தலில்
தெரிதாவின் சம்பட்டியில்

அய்யா நினது திருவடி சரண்புகவே
மார்க்சய்யா
அய்யா…


அந்தக பாப்லோ நெரூதா கவிதையை மொழிபெயர்த்ததில் எந்தச் சிக்கலும் இல்லை அதையும் கண்டுபிடியுங்கள். விளக்கம் கேட்டு நீங்கள் வெட்டிய அனுப்பிய பகுதிகள் எல்லாம் இதை விளக்கி எழுதியபோது வந்ததுதான் இது…இன்னும் விளக்கித்தான் உங்களுக்குப் புரியவேண்டுமெனில். நீங்கள் கவிதை எழுதாமல் கவிதைகளைப் படிப்பது மூன்ரு வேளைக்கு ஒரு வேளை உத்தமம்.
பெயரைக் கேட்டு ஒரு கேள்வி. அய்யா பெயர் எப்பொழுதும் பெரும் பிரச்சினை அய்யா. அதில் வேறொன்றுமில்லை விமர்சனம் எழுதிவைத்தால், இவன் எனக்கு மாமன், இவன் எனக்குச் சித்தப்பா, இவன் எனக்கு ஒன்றுவிட்ட பெரியப்பாவின் ஒன்றுவிட்ட தங்கை மகன் எனச்சொல்லி அந்த உரைகல்லை உடைத்து கவிதையைப் பதம் பார்த்துவிடுகிறார்கள். அதனால் என்னை முன்வைப்பதில் சிக்கல்கள் பல உள்ளது. ஏற்கனவே நான் கேட்டுச் சலித்து பதில் வராத கேள்விகள் கீழே அய்யா..

1 சிறு கேள்வி கேட்டாலே கவிஞக் கண்மணிகள் தொடை வழியே குதம் வழியே வழியவிடுவது எது.?

2 விமர்சனம் செய்தால் பதிலுக்கு அவர்கள் கழிந்து வைக்கும் வார்த்தைகள் எந்த மணத்தோடு ஒத்துப் போகிறது.?

3 சக கவிஞருக்கு வக்காலத்து வாங்க வருபவரும் ஒரு கவிஞராய் இருப்பது ஏன்?

விமர்சனத்தில் எங்கு பிழையுள்ளது எனக் கேட்காத தாங்கள் என்னிடம் கவிதைக்கு விளக்கம் கேட்டதே எனக்கு இப்பொழுது பெரிய விசயமாய் இருக்கிறது. நீங்களாவது என் குடும்ப நலத்தை கேட்காமல் இருந்தீர்களே.அந்தளவுக்கு விஷேசம்.

அய்யா எனது தளச்செயல்பாடுகளை வெட்கப்பட்டு மூடிவிட்டேன். முடிந்தால், உங்களுக்குத் தளமிருந்தால்.. இதைப் பகிரலாம்.
தொடர்ந்து உரையோடுவோம் ஆதிரரே.

பூக்கட்டும் திசையெங்கும் மலர்கள்
வீசட்டும் வாசம் எங்கெங்கும்.

அய்யா வணக்கம்….
அன்பிற்குரிய மனங்கனிந்த
-       தீர்த்த முனி


Saturday, 6 October 2012

ஆத்மார்த்தி விமர்சனத்திற்கு முன் வைத்த கவிதை.





கற்பம் 
- ஆத்மார்த்தி

ஒரு பாடலின் இடையிசையாய் கழிந்துகொண்டிருக்கிறது காலம்.
.
முப்பத்து ஐந்தாவது வரி துவக்கத்தில்என் மடியில் தலைசாய்த்து மரித்துப்போனாள் வயலட் கலரிங் கூந்தல்காரி.
பாடலின் இரண்டாவது வரியிலேயே கள்ளப்பகிர்வுக்குப் பின் திரும்பிவந்தவள் ஏறெடுக்காமல் குளியலறைக்குப் போகிறாள்.
எட்டாவது வரியின் இரட்டிக்கிற வார்த்தைகளின் வழியாக கழுத்தைத் திருகிக் கொலை செய்த பாவத்தின் வீச்சம் வழிகிறது.
இருபத்து இரண்டாம் வரி ஒலித்து முடிக்கையில் உன் மரணம் நிகழ்ந்துகொண்டிருக்கும்.
முதல் பல்லவி முடிந்து மீண்டும் முதல்வரி ஒலிக்கையில் உலகத்தின் ஒட்டுமொத்த வாதைக்குமான மருந்திடல் துவங்குகிறது.
சரணத்தின் மூன்றாம் வரியின் ஆறாவது வார்த்தை எல்லாக் கோரிக்கைகளுக்கும் செவிசாய்ப்பதாயிருக்கிறது.
சூன்யங்களின் பீடிக்கிற கரங்களனைத்தையும் வெட்டியெறிவதற்கான சூட்சுமம் எழுபதாவது வரியினுள் இருக்கிறது.
ஒப்புக்கொடுக்கிற தேவன்களின் மறைவிடங்களின் மீது ஒளி பாய்ச்சுவதாக எண்பத்தாறாம் வரி திகழ்கிறது.
எலும்புகளைப் பொசுக்கிக் கிடைக்கிற புகையெண்ணையின் மணத்தை தொண்ணூறாவது வரி கமழ்கிறது.
இரண்டாவது சரணத்தின் துவக்க வரியினுள் தேடல்களனைத்தும் முடித்துவைக்கப்படுகின்றன.
அதற்கடுத்த ஆயிரத்துப் பன்னிரண்டாவது வரியில் பூப்படைந்த பின்னரே உயிர்த்தல் நிகழ்கிறது.
சாவதற்குத் தயாரான கிழட்டுபொம்மைகளைக் கொன்றுவிளையாடும் பிள்ளையினங்களின் பேரொலி எட்டாயிரமாவது வரியில் வருகிறது.
பாக்கெட்டுக்களில் எல்லாவற்றையுமே காய்க்கிற ஒற்றை மரத்தில் அன்பின் பொட்டலங்களைச்சீந்துவாரில்லை என்ற குறிப்பு பதின்மூன்றாம்வரியில் தொனிக்கிறது.
மூன்றாவது சரணத்தின் ஒன்பதாவது வரியில் கடுக்கைக் கண்ணியனைத் தன் சடைபிரியொன்றில் தூக்கிலிட்டு நடனமாடுகிற குண்டலி எள்ளுகிறாள்.
நாப்பத்துமூன்றாயிரத்துப் பதினாறாவது வரியில் மீன்கள் எல்லாம் செத்து மிதக்கின்றன நீர்தளத்தில்.
பத்தொன்பதாவது வரியின் கடைசிக்கு முந்தைய சொல்லில் அணைந்துகொண்டிருக்கிறது வானம்.
பூச்சியம் தவிர வேறொன்றுமில்லை.




அய்யா இவ்வரிகளில்  உங்களுக்கு என்னென்ன வார்த்தைகள்  எல்லாம் தெரிந்திருக்கிறது  என பட்டியலிட்டிருக்கிறீர்கள். இந்த பட்டியலிடும் அறிவு முதலில் கவிதைக்கு சற்று தொலைவாக இருக்கவேண்டும். கவிதையில் நிகழும் கவிஞனின் பலகுரல் தன்மையானது கவிதையை மேலோட்டமாக வாசிப்பவனுக்கு வேலையை அதிகமாக்குகிறது. அந்த பலகுரல் தன்மையை ஒரு உடனடி உண்பொருளாக வேலைத்திட்டமாக பயன்படுத்தமுடியாது. குறைந்தபட்சம் அதைப் பயன்படுத்தும்படி மாற்ற வேண்டுமானால் அதன் பல குரல் தன்மையை அடையாளம் கண்டு அர்த்தங்களை தயார்செய்யவேண்டும். அதைப் புரிந்து கொள்ளப்பட வேண்டிய புதிய பிரதியாக வாசிப்பவன் மாற்ற வேண்டும். இங்கு மேற்குறிப்பிட்டதில் இரண்டுமே நிகழாததோடு வெறும் வார்த்தைக்குவியலாய் தலை குப்புற நின்றுகொண்டிருக்கிறது.  இவ்வெறும் வார்த்தைக்குவியல்களை வைத்தும் அதன் வடிவத்தை வைத்தும் நாம் இதைக் கவிதையென்று சொல்ல முடியாது.


கவிதைக்கே உரிய சொற்கள் சில இருக்கத்தான் செய்கின்றன என்பதை ஒரு வாசகாரக நீங்கள் உணர்ந்துள்ளீர்கள். ஆனால் எழுதும்போது அச்சொற்களை நீங்களே ஏதோ கண்டுபிடித்த விஞ்ஞானி போல் யுரேகா என்று குதித்து விடுகிறீர்கள். அய்யா பிரதிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட பிரதிகளை எப்போதும் தன்னுடன் வைத்திருக்கும். அதாவது நீங்கள் எப்போதும் முதல் வரியின் முதல் வார்த்தையிலிருந்து மட்டும் தொடங்குவதில்லை. இறுதியோ...இல்லை நடுவரியிலிருந்தோ கவிதை உருவாகலாம்.

ஆனால் நீங்கள் வார்த்தைகளை இடைவெளியில் கொன்று விடுகிறீர்கள். ஒன்று கவிதை எழுதுகிறபோதே அதை ஒரு வாசகனாக நீங்கள் இவ்வகைக் கவிதைகள் எவ்வகை வாசகனுக்கானது என்ற குறிப்பை உங்களது மனம் உணர்த்ததினாலும், அறிவகந்தை உங்களை ஒரு கவிஞர் என்று நம்ப வைத்து மேலும் சில வரிகளை எழுத வைத்துவிடும். ஒரு இடத்தில் கவிஞராக இருக்க வேண்டும் அதே சமயம் கவிதை எல்லோரிடமும் போய்ச் சேரவேண்டும், அது மட்டுமல்லாது வித்தியாசமாய் இருக்க வேண்டும் என்பதே உங்கள் நோக்கமாயிருக்கிறது.

இந்த பெருந்தவிப்பே சொற்களை குறுக்கும் மறுக்குமாக உடைத்து இன்னும் ரகசியத்தைப் பேசும் ஒரு மொழிபோல் உங்களை செயல்படுத்தியிருக்கிறது. வாசகர்களை ஏமாற்ற நாம் நமக்குத் தெரிந்த பட்டியல்களை இடுவது ஒரு ஜிக் ஜாக் வேலையாகும். ஆனால் ஒரு விமர்சகன் தனது வாசிப்பின் மூலம் உடைப்பது முதலில் இந்த ஜிக்ஜாக்கைத்தான். அதனால்தால் கவிதை காலியாகவும் செய்கிறது.

கவிதையின் நவீன வடிவம் இதுவாகத்தானிருக்கும் என நீங்கள் நம்பிய வடிவத்தை உங்களுக்குத் தெரிந்த வார்த்தைகளை வைத்து விளையாண்டிருக்கிறீர்கள். ஒரு குழந்தை அழுவதை ரசிக்க முடியும். அதற்காக அழவைத்து வேடிக்கை பார்க்கக் கூடாது. நீங்கள் உங்கள் வரிகளை வைத்து வேடிக்கை காட்டுகிறீர்கள். வேடிக்கை காட்டுவதை நம் ஊரில் வித்தை காட்டுவதாகத்தான் சொல்லுவார்கள். நீங்கள் காட்டும் இந்த வேடிக்கை வெகுவாக பல தமிழ் கவிகள் காட்டுவதுதான்.

ஆனால் அதில் பெரும்பாலோர் வேடிக்கை காட்டி யாசகம் கேட்டு அலுமினிய வார்த்தைகளை நீட்டுவார்கள். ஆனால் நீங்கள் உழைக்கிறீர்கள், கவிதைக்காக அதன் மொழிக்காக வார்த்தைகள் கைவரப்பெற நீங்கள் உழைப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. தொடர்ச்சியாக உழையுங்கள். பலன் உண்டு. மேலே நீங்கள் எழுதியதை கவிதை என்று தயவுசெய்து நம்பாதீர்கள், அது நீங்கள் உழைக்க வேண்டிய பொழுதுகளைத் தின்று மென்று துப்பிவிடும். நவீனத்துவத்தோடு இணையாததனைத்தும் கொல்லப்படுகிறது. ஆனால் அவை தற்கொலைகளாகவே பதிவு செய்யப்படுகின்றன.கவிஞனின் தன்னிலை  ஒற்றைப் பரிணாமம் கொண்டதல்ல...அதுவும் எல்லா மனிதர்களைப் போலவே அவனும் முரண்பாடுகளின் ஒட்டுமொத்தக் கூறுகளைக் கொண்டவனே.அது குறித்து நாம் நீங்கள் அனுப்பிய இரண்டாவது கவிதையில் பேசுவோம்.


ஓவியத்தில் தெறிந்த 
இந்திரியம்
நீந்தும்
குழந்தைகள்
பெயரற்ற தேசம்
பீங்கான்
கருவரை
கற்பம்
தரி
சிதை
பெயரழித்தல் ஒரு வகைச் சமன்பாடு.

- தீர்த்தமுனி


Monday, 1 October 2012

வா.மணிகண்டன் கவிதையை முன்வைத்து.....





டைனோசர்களுடன் வாழ்பவன்


டைனோசர்களை வளர்க்கும்
என் பக்கத்து வீட்டுக்காரரின் பற்களில்
கண்கள் முளைத்திருக்கிறதென
வெளியூர்களிலிருந்து வந்து பார்க்கிறார்கள்
அவர்களிடம்
தன் பற்களைக் காட்டும் அந்த மனிதன்
ஒருபோதும் டைனோசர்களைக் காட்டுவதில்லை
தெருவோரம் கிடந்த டைனோசர் குட்டியை
முதன் முதலாக
அவர் எடுத்து வந்தபோது
அருகாமையில் எதிர்த்தார்கள்
அக்குட்டி வளர்கையில்
இரத்த கவிச்சை வீச குறையத் துவங்கியது
எதிர்த்தவர்களின் எண்ணிக்கை
இப்பொழுது நிறைய டைனோசர்களை வளர்க்கிறார்
அவைகளுக்கென வீடுகளை
வாடகைக்கு பிடிக்கிறார். வீடு தராதவர்களை
அவைகளுக்கு உணவாக்கி விடுவதாக மிரட்டுவதும் உண்டு
அதன்பிறகாக வாடகை தருவதில்லை
டைனோசர்கள் அவர் மீது மிகுந்த அன்பு செலுத்துவதை
அவரின் பாதத்தை தம் சொர சொர நாவினால் தடவுவது உட்பட-
ஜன்னலில் ஒளிந்து பார்த்திருக்கிறேன்
சமீபமாக
வீடுகளுக்கு அதிக சேதாரமில்லாமல்
அவை
அடங்கி வாழக் கற்றுக் கொண்டதாக டீக்கடைக்காரரிடம் சொல்லியிருக்கிறார்
’டைனோசர்களுடன் வாழ்வது எப்படி’ என்ற புத்தகம் வாசிப்பதை
தினசரி வழக்கமாக்கிக் கொண்ட எனக்கு
டைனோசர்களின் அருகில்
அவன்
என் குழந்தையயை தூக்கிச் சென்றதாக கேள்விப்பட்ட
வெள்ளிக்கிழமையிலிருந்து
விரல்கள் சில்லிட்டுக் கிடக்கின்றன
எதிர்க்கவே முடியாத மனிதனிடம்
மறுப்பு சொல்வதற்கான வழிமுறைகளை
கூகிளில் தேடி
இரவுகள் தீர்ந்து கொண்டிருக்கின்றன
இதுவரை கடுமை காட்டப்படாத குழந்தையிடம்
இனி அவனிடம் போகக்கூடாது என மிரட்டிய கணம்
அதன் பற்கள் சிமிட்டியதை பார்த்தேன்.

வா.மணிகண்டன்



கவிஞனின் விருப்பமே குறிப்பிட்ட நேரம் வரை குறிப்பிட்ட கருத்தை வலியுறுத்துகிறது. அந்த விருப்பம் அவனைக் கட்டுப்படுத்தாதபோது மற்ற கருத்துக்கள் அவனைத் திசை திருப்பி எடுத்த பணியை வேறு திசைக்கு அனுப்பிவிடுகின்றன. கவிஞனின் கலையறிவுக்கு முன்னோடியாக அவனுடைய விருப்பமே முந்திக்கொள்கிறது. இந்த விருப்பமும் தன்னிச்சையாக செயல்படுவதில்லை. இதுவும் மனத் தெளிவையே அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. ஒரு மரக்கட்டையும், உணர்விழந்த மனிதனும் எதன் மீதும் விருப்பம் கொள்ளமுடியாது. எனவே மனத் தெளிவிருந்தால் தான் விருப்பம் தோன்றமுடியும். மனத்தெளிவு என்பது நான் இருக்கிறேன் என்னும் இருத்தலைவிட்டுப் பிரியாமல் இரண்டறக் கலந்திருப்பது.

இச்செயல்பாடு மேற்கண்ட கவிதையில் எங்குமே செயல்படவில்லை. செயல்பட்டதெல்லாம் அவரது சொந்தமான வாசிப்பு அவரை வாசக நிலையிருந்து எழுத்தாளன் என்ற நிலைக்குக் கூட்டிச் சென்ற நோக்கமே படைப்பின் அளவுகடந்த உன்னத நிலைக்கு அழைத்துச் சென்று சம்பந்தப்பட்ட கவிதையை இன்னொரு பாதிப்பாய் வெளியிட வைத்திருக்கிறது. எளிதாகச் சொல்ல வேண்டுமென்றால் ரஜினிகாந்த் போல் முடி வேண்டும் என்பதற்காக அவரது ரசிகர்கள் முன் மண்டையை வழித்துக்கொள்வது போல. இங்கு நோக்கம் ரஜினிகாந்தின் பிம்பமாய் தன்னை ஒற்றியெடுப்பதே. ஆனால் கவிஞருக்கு வார்த்தைகள் ஒத்துழைக்கின்றன.

ஒரு கவிதை தீட்டுவதற்காக எழுத்தாணியில் மை நிரப்பி அல்லது கணிப்பொரியின் விசைப்பலைகையில் கண்வைத்து அவன் விரல்களைக் கொண்டு செல்லும்போது அவன் கவிதை எழுதப்போகிறான் என ஆர்வத்தோடு எதிர்பார்க்கிறோம். ஆனால் கவிதை எழுதாமல் விரல்களை இழுத்துக்கொள்கிறான். திடுமென நிறுத்தியவன் சிந்திக்கிறான். பிறகு பேனாவை, அல்லது விசைப்பலகையை விட்டு எழுகிறான். அவனைத் தடுத்து நிறுத்தியது எது? மனக்கண்ணால் எந்தக் கவிதையை எழுத நினைத்தானோ அந்தக் கவிதையின் கருத்து அல்லது காட்சி அவனைக் கட்டுப்படுத்துவற்காக குறிப்பிட்ட பழைய கருத்து அவன் உள்ளத்தில் ஏன் தோன்றுகிறது. கவிஞனுக்கு என்று  தனித்துள்ள விருப்பமே அவ்வாறு அவனைத் தூண்டுகிறது.

இக்கவிதை புழங்கு தளம் ஏற்கனவே தமிழ் வாசகர்களுக்கு பழக்கப்பட்டது. இக்கவிதையில் கவிஞரய்யா உருவாகிய வார்த்தைகளை கண்டால் நவீன வாசகருக்கு…( நவீன கவிஞர் என்றால் நவீன வாசகரும் இருக்க வேண்டுமல்லவா) கவிஞரய்யா ஏதோ ஒரு புதிரைச் சுட்டுகிறார் எனத் தோன்றும். பழக்கப்பட்ட சொற்களாகத்தான் எல்லாம் இருக்கின்றன. கவிதையில் டைனோசரை நுழைத்ததும் அது நவீன வடிவத்தை எடுத்திருக்கிறது. உதாரணமாக, பார்வையில் இதை வைத்துப் பார்க்கலாம். முதலில் நவீன வாசகன் செய்ய வேண்டியது சிறிய பெயர் மாற்றம் டைனோசருக்குப் பதில் இதில் குருவி என்றிருந்தால் வளர்க்கும் வீட்டுக்காரரின் கண்களில் அலகுகள் தெரிந்திருக்கும், கழுதை என்றால் அதை வளர்க்கும் வீட்டுக்காரரின் கண்களில் கால்கல் தெரிந்திருக்கும். இப்படி ஏதேனும் ஒன்றை வகைக்கப்படுத்தலாம். வகைப்படுத்துவதற்கு முன்பு இதே கவிதையை மிகச் சிறப்பாக கையாண்டவர் கவிஞர் சங்கர் ராமசுப்பிரமணியன் அய்யா அவர்கள். சிங்கத்துக்குப் பல்துலக்குவது எப்படி என்ற அவரது கவிதை தீராநதியில் வெளி வந்தபோது அதன் பார்வையாளர்கள் சிங்கத்துக்கு பதில் துலக்குவது எப்படி என்ற கேள்வி நிறைய பேரைப் பாதித்த ஒன்று. மிக முக்கியமாக அக்கவிதை வெளிப்படுத்திய தன்னளவிலான அரசியல், சுய பச்சாதபம்.

அக்கவிதையை முழுவதும் அடியொற்றி, அக்கவிதை வீச்சால் தாக்கப்பட்டு இக்கவிதை வரிகளை சமைத்திருக்கிறார் மணிகண்டன். ஏற்கனவே சிங்கத்திற்கு பல் துலக்குவது படித்து அலுப்புற்ற பழைய வாசகருக்கு இக்கவிதா அனுபவம், புதிய மொந்தை பழைய கள் என்றே சொல்லத் தூண்டும். வார்த்தைகளைக் கவனித்து, இடைவெளிகளைப் பார்த்து பழகி வந்த நவீன வாசகருக்கு கவிஞர் ஏதோ ஒரு பூச்சாண்டியப் பார்த்து பயந்திருக்கிறார் என்று மட்டும் தோணலாம். வாசகரை வெறும் வார்த்தைகளின் மூலம் எடை போடும் கவிஞரய்யா கண்களில் எழுத்துக்கள் தெரிவதை நாம் பார்க்கலாம்.

(கவிதை என்று சொல்லப்பட்ட மேற்கண்டதில் இடையிடையே வரும் டீக்கடை, கூகுள். பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லாம் வசன உத்திகளேயன்றி வேறில்லை. கண்களில் பற்கள் முளைத்தன என்ற பதங்கள் எல்லாம் சாதாரண படிமங்களாகக் கூடத் தேறாமல் இருக்கிறது.)


இக்கவிதையில் நாம் பாராட்டும் அம்சம் மூலத்தின் உத்திகளை போலி செய்வதற்கென இவ்வார்த்தைகள் உண்டாகியிருந்தாலும். அது நம்மிடையே செயல்படும்போது நமக்குரிய வரிகளாக மாறும்போதுதான்.  இதனிடையே நாம் காணும் இன்னொன்று கவிதைச் செயல்பாட்டில் திடீரென கதை சொல்லும் நிலைக்கு கவிஞர்கள் சென்றுவிடுவதுதான். அது மூலத்திலிருந்தே வந்த நினைவுதான்.

டைனோசர்களை வளர்க்கும்
என் பக்கத்து வீட்டுக்காரரின் பற்களில்
கண்கள் முளைத்திருக்கிறதென
வெளியூர்களிலிருந்து வந்து பார்க்கிறார்கள்
அவர்களிடம்
தன் பற்களைக் காட்டும் அந்த மனிதன்
ஒருபோதும் டைனோசர்களைக் காட்டுவதில்லை

இவ்வரிகள் கவிஞரய்யாவின் பாதிப்புகளை வலுவாக நங்கூரமிட்டாலும் அடுத்து அவர் செய்வது கதை செய்யும் கருத்தைத்தான், அது தான் ஏதோ மிக முக்கியமான ஒன்ரை எழுதிக்கொண்டிருக்கிறோம் என்ற தோற்றப்பிழையை உருவாக்கிவிட்டது. விளைவு கதையாகி பழைய கவிதையை இன்னும் சிராய்க்கிறது. இக்கவிதையோடு உலகப்புகழ்பெற்ற மூக்கு – பஷீரையும் ஞாபகத்தில் கொள்ளலாம். இந்த கவிதையை மட்டும் மூலமாக வைத்து மணிகண்டன் அய்யாவின் கவியுலகை எடைபோடக்கூடாது. இன்னும் விரிவாக நாம் பேசலாம்


விமர்சனங்களை வாசகர்கள் சுட்டலாம்.