Monday 1 October 2012

வா.மணிகண்டன் கவிதையை முன்வைத்து.....





டைனோசர்களுடன் வாழ்பவன்


டைனோசர்களை வளர்க்கும்
என் பக்கத்து வீட்டுக்காரரின் பற்களில்
கண்கள் முளைத்திருக்கிறதென
வெளியூர்களிலிருந்து வந்து பார்க்கிறார்கள்
அவர்களிடம்
தன் பற்களைக் காட்டும் அந்த மனிதன்
ஒருபோதும் டைனோசர்களைக் காட்டுவதில்லை
தெருவோரம் கிடந்த டைனோசர் குட்டியை
முதன் முதலாக
அவர் எடுத்து வந்தபோது
அருகாமையில் எதிர்த்தார்கள்
அக்குட்டி வளர்கையில்
இரத்த கவிச்சை வீச குறையத் துவங்கியது
எதிர்த்தவர்களின் எண்ணிக்கை
இப்பொழுது நிறைய டைனோசர்களை வளர்க்கிறார்
அவைகளுக்கென வீடுகளை
வாடகைக்கு பிடிக்கிறார். வீடு தராதவர்களை
அவைகளுக்கு உணவாக்கி விடுவதாக மிரட்டுவதும் உண்டு
அதன்பிறகாக வாடகை தருவதில்லை
டைனோசர்கள் அவர் மீது மிகுந்த அன்பு செலுத்துவதை
அவரின் பாதத்தை தம் சொர சொர நாவினால் தடவுவது உட்பட-
ஜன்னலில் ஒளிந்து பார்த்திருக்கிறேன்
சமீபமாக
வீடுகளுக்கு அதிக சேதாரமில்லாமல்
அவை
அடங்கி வாழக் கற்றுக் கொண்டதாக டீக்கடைக்காரரிடம் சொல்லியிருக்கிறார்
’டைனோசர்களுடன் வாழ்வது எப்படி’ என்ற புத்தகம் வாசிப்பதை
தினசரி வழக்கமாக்கிக் கொண்ட எனக்கு
டைனோசர்களின் அருகில்
அவன்
என் குழந்தையயை தூக்கிச் சென்றதாக கேள்விப்பட்ட
வெள்ளிக்கிழமையிலிருந்து
விரல்கள் சில்லிட்டுக் கிடக்கின்றன
எதிர்க்கவே முடியாத மனிதனிடம்
மறுப்பு சொல்வதற்கான வழிமுறைகளை
கூகிளில் தேடி
இரவுகள் தீர்ந்து கொண்டிருக்கின்றன
இதுவரை கடுமை காட்டப்படாத குழந்தையிடம்
இனி அவனிடம் போகக்கூடாது என மிரட்டிய கணம்
அதன் பற்கள் சிமிட்டியதை பார்த்தேன்.

வா.மணிகண்டன்



கவிஞனின் விருப்பமே குறிப்பிட்ட நேரம் வரை குறிப்பிட்ட கருத்தை வலியுறுத்துகிறது. அந்த விருப்பம் அவனைக் கட்டுப்படுத்தாதபோது மற்ற கருத்துக்கள் அவனைத் திசை திருப்பி எடுத்த பணியை வேறு திசைக்கு அனுப்பிவிடுகின்றன. கவிஞனின் கலையறிவுக்கு முன்னோடியாக அவனுடைய விருப்பமே முந்திக்கொள்கிறது. இந்த விருப்பமும் தன்னிச்சையாக செயல்படுவதில்லை. இதுவும் மனத் தெளிவையே அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. ஒரு மரக்கட்டையும், உணர்விழந்த மனிதனும் எதன் மீதும் விருப்பம் கொள்ளமுடியாது. எனவே மனத் தெளிவிருந்தால் தான் விருப்பம் தோன்றமுடியும். மனத்தெளிவு என்பது நான் இருக்கிறேன் என்னும் இருத்தலைவிட்டுப் பிரியாமல் இரண்டறக் கலந்திருப்பது.

இச்செயல்பாடு மேற்கண்ட கவிதையில் எங்குமே செயல்படவில்லை. செயல்பட்டதெல்லாம் அவரது சொந்தமான வாசிப்பு அவரை வாசக நிலையிருந்து எழுத்தாளன் என்ற நிலைக்குக் கூட்டிச் சென்ற நோக்கமே படைப்பின் அளவுகடந்த உன்னத நிலைக்கு அழைத்துச் சென்று சம்பந்தப்பட்ட கவிதையை இன்னொரு பாதிப்பாய் வெளியிட வைத்திருக்கிறது. எளிதாகச் சொல்ல வேண்டுமென்றால் ரஜினிகாந்த் போல் முடி வேண்டும் என்பதற்காக அவரது ரசிகர்கள் முன் மண்டையை வழித்துக்கொள்வது போல. இங்கு நோக்கம் ரஜினிகாந்தின் பிம்பமாய் தன்னை ஒற்றியெடுப்பதே. ஆனால் கவிஞருக்கு வார்த்தைகள் ஒத்துழைக்கின்றன.

ஒரு கவிதை தீட்டுவதற்காக எழுத்தாணியில் மை நிரப்பி அல்லது கணிப்பொரியின் விசைப்பலைகையில் கண்வைத்து அவன் விரல்களைக் கொண்டு செல்லும்போது அவன் கவிதை எழுதப்போகிறான் என ஆர்வத்தோடு எதிர்பார்க்கிறோம். ஆனால் கவிதை எழுதாமல் விரல்களை இழுத்துக்கொள்கிறான். திடுமென நிறுத்தியவன் சிந்திக்கிறான். பிறகு பேனாவை, அல்லது விசைப்பலகையை விட்டு எழுகிறான். அவனைத் தடுத்து நிறுத்தியது எது? மனக்கண்ணால் எந்தக் கவிதையை எழுத நினைத்தானோ அந்தக் கவிதையின் கருத்து அல்லது காட்சி அவனைக் கட்டுப்படுத்துவற்காக குறிப்பிட்ட பழைய கருத்து அவன் உள்ளத்தில் ஏன் தோன்றுகிறது. கவிஞனுக்கு என்று  தனித்துள்ள விருப்பமே அவ்வாறு அவனைத் தூண்டுகிறது.

இக்கவிதை புழங்கு தளம் ஏற்கனவே தமிழ் வாசகர்களுக்கு பழக்கப்பட்டது. இக்கவிதையில் கவிஞரய்யா உருவாகிய வார்த்தைகளை கண்டால் நவீன வாசகருக்கு…( நவீன கவிஞர் என்றால் நவீன வாசகரும் இருக்க வேண்டுமல்லவா) கவிஞரய்யா ஏதோ ஒரு புதிரைச் சுட்டுகிறார் எனத் தோன்றும். பழக்கப்பட்ட சொற்களாகத்தான் எல்லாம் இருக்கின்றன. கவிதையில் டைனோசரை நுழைத்ததும் அது நவீன வடிவத்தை எடுத்திருக்கிறது. உதாரணமாக, பார்வையில் இதை வைத்துப் பார்க்கலாம். முதலில் நவீன வாசகன் செய்ய வேண்டியது சிறிய பெயர் மாற்றம் டைனோசருக்குப் பதில் இதில் குருவி என்றிருந்தால் வளர்க்கும் வீட்டுக்காரரின் கண்களில் அலகுகள் தெரிந்திருக்கும், கழுதை என்றால் அதை வளர்க்கும் வீட்டுக்காரரின் கண்களில் கால்கல் தெரிந்திருக்கும். இப்படி ஏதேனும் ஒன்றை வகைக்கப்படுத்தலாம். வகைப்படுத்துவதற்கு முன்பு இதே கவிதையை மிகச் சிறப்பாக கையாண்டவர் கவிஞர் சங்கர் ராமசுப்பிரமணியன் அய்யா அவர்கள். சிங்கத்துக்குப் பல்துலக்குவது எப்படி என்ற அவரது கவிதை தீராநதியில் வெளி வந்தபோது அதன் பார்வையாளர்கள் சிங்கத்துக்கு பதில் துலக்குவது எப்படி என்ற கேள்வி நிறைய பேரைப் பாதித்த ஒன்று. மிக முக்கியமாக அக்கவிதை வெளிப்படுத்திய தன்னளவிலான அரசியல், சுய பச்சாதபம்.

அக்கவிதையை முழுவதும் அடியொற்றி, அக்கவிதை வீச்சால் தாக்கப்பட்டு இக்கவிதை வரிகளை சமைத்திருக்கிறார் மணிகண்டன். ஏற்கனவே சிங்கத்திற்கு பல் துலக்குவது படித்து அலுப்புற்ற பழைய வாசகருக்கு இக்கவிதா அனுபவம், புதிய மொந்தை பழைய கள் என்றே சொல்லத் தூண்டும். வார்த்தைகளைக் கவனித்து, இடைவெளிகளைப் பார்த்து பழகி வந்த நவீன வாசகருக்கு கவிஞர் ஏதோ ஒரு பூச்சாண்டியப் பார்த்து பயந்திருக்கிறார் என்று மட்டும் தோணலாம். வாசகரை வெறும் வார்த்தைகளின் மூலம் எடை போடும் கவிஞரய்யா கண்களில் எழுத்துக்கள் தெரிவதை நாம் பார்க்கலாம்.

(கவிதை என்று சொல்லப்பட்ட மேற்கண்டதில் இடையிடையே வரும் டீக்கடை, கூகுள். பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லாம் வசன உத்திகளேயன்றி வேறில்லை. கண்களில் பற்கள் முளைத்தன என்ற பதங்கள் எல்லாம் சாதாரண படிமங்களாகக் கூடத் தேறாமல் இருக்கிறது.)


இக்கவிதையில் நாம் பாராட்டும் அம்சம் மூலத்தின் உத்திகளை போலி செய்வதற்கென இவ்வார்த்தைகள் உண்டாகியிருந்தாலும். அது நம்மிடையே செயல்படும்போது நமக்குரிய வரிகளாக மாறும்போதுதான்.  இதனிடையே நாம் காணும் இன்னொன்று கவிதைச் செயல்பாட்டில் திடீரென கதை சொல்லும் நிலைக்கு கவிஞர்கள் சென்றுவிடுவதுதான். அது மூலத்திலிருந்தே வந்த நினைவுதான்.

டைனோசர்களை வளர்க்கும்
என் பக்கத்து வீட்டுக்காரரின் பற்களில்
கண்கள் முளைத்திருக்கிறதென
வெளியூர்களிலிருந்து வந்து பார்க்கிறார்கள்
அவர்களிடம்
தன் பற்களைக் காட்டும் அந்த மனிதன்
ஒருபோதும் டைனோசர்களைக் காட்டுவதில்லை

இவ்வரிகள் கவிஞரய்யாவின் பாதிப்புகளை வலுவாக நங்கூரமிட்டாலும் அடுத்து அவர் செய்வது கதை செய்யும் கருத்தைத்தான், அது தான் ஏதோ மிக முக்கியமான ஒன்ரை எழுதிக்கொண்டிருக்கிறோம் என்ற தோற்றப்பிழையை உருவாக்கிவிட்டது. விளைவு கதையாகி பழைய கவிதையை இன்னும் சிராய்க்கிறது. இக்கவிதையோடு உலகப்புகழ்பெற்ற மூக்கு – பஷீரையும் ஞாபகத்தில் கொள்ளலாம். இந்த கவிதையை மட்டும் மூலமாக வைத்து மணிகண்டன் அய்யாவின் கவியுலகை எடைபோடக்கூடாது. இன்னும் விரிவாக நாம் பேசலாம்


விமர்சனங்களை வாசகர்கள் சுட்டலாம்.

No comments:

Post a Comment