Tuesday 2 October 2012

சர்வலட்சணமும் பொருந்திய கவிதைகள்




நான் வாசித்த  கவிதைகளில் என்னை சற்று இடம் பெயரவைத்த கவிதைகளென, கீழே இட்டிருக்கிற இரண்டு கவிதைகளை எப்பொழுதும் நினைவு கூர்வேன்.


முதல் கவிதையில் எந்த இடத்திலும் இருட்டென்பது இல்லை. மிக நேரடியாக காதலை ஆத்மாவில் சொறுகியதாகவே இக்கவிதையை இன்றும் உணர்கிறேன். வார்த்தைப்பாடுகளுக்குள் சிக்கி காதலிப்பதைவிட காதலிக்குச் சேதி சொல்ல தங்களது அகம்பாவத்தைப் பிழிந்து எழுதி, காதலன் என்பதோடு தன்னைக் கவிஞன் என வாசகரை உணரச்செய்ய கவிஞர்கள் படுத்தும் பாட்டில் எத்தனை இளைஞர்களுக்கு காதல்  தட்டிப்போயிருக்குமோ…

இக்கால காதலன் கவலைப்படுவதேயில்லை. நேரே ஏதேனும் ஒரு புத்தக கடைக்குச் சென்று தபூ சங்கர் கவிதையையோ, இல்லை. பா.விஜய்  கவிதைப்புத்தகமோ ஒன்றை வாங்கி ஏதேனும் ஒரு பக்கத்தைக் கிழித்து நீட்டிவிடுகிறார்கள், உண்மையில் காதலை மிக எளிதாக அளக்க முட்டாள்த்தனத்தை மட்டுமே கருவியாக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது. ஆனால் இணையக் கவிஞர்கள் காதலைப் பிதுக்கி வார்த்தைக்கடலில் கவிதை முத்தை எடுக்கிறேன் பேர்வழிகள் என முக்குவதைப் பார்க்கும் போது வயிறு குலுங்க பற்களை இடமாற்றம் செய்ய வேண்டியிருக்கிறது. இருக்கட்டும் அது அது அவ்வவ்வழியே.

ஆண்கள் காதல் கவிதை எழுதும்போது அடையத்துடிக்கிற இடம் காதலன் என்ற இடத்தை விட தனது அறிவையும், ரசனை கொண்டவன் என்பதையும் நிரூபிப்பதாகவே இருக்கிறது.  இவ்வழியேதான் பெரும்பாலான கவிதைகளை ஆண்கள் தொடர்துகொண்டிருக்கின்றனர். அந்த அகம்பாவத்தைக் கவனித்து வந்தே கவிதை தன்னுடலைக் காட்டாமல் ஓடியொளிந்துகொண்டிருக்கிறது. 

 ஆணுக்கு காதல் வாய்ப்பது என்பது அவனது லாபக்கணக்குகளில் எண்ணிக்கை கூட்ட ஒரு எண். ஆனால் பெண்களுக்கு அது கிணற்றின் நடுவே அறுந்து விழத்தயாராய் இருக்கும் வேரை இடதுகையால் பற்றி ஊசலாடியபடி,  கிணற்றில் உறக்கும் பாம்புகளை பார்த்தபடி, மரத்தின் மேலே தேன்கூடு எடை தாங்காமல் சொட்டும் ஒரு துளியை நக்கிப் பார்க்கும் போராட்டமாக இருக்கிறது. 

ஆண்கள் காதல் கடிதம் எழுதி அதை வாசித்து, நரகமேறிய எத்தனையோ அனுபவங்கள் எனக்குண்டு…ஆனால் ஒரு பெண் நலமா என்ர மூன்று வார்த்தைகளை எழுதுகையில் அவ்வெழுத்துக்களின் இடைவெளி ,குறுக்கு வெட்டுத் தோற்றம், காலபரிமாணம், பயம், வியர்வை, அத்தனையும் புலனாவதை உணர்ந்திருக்கிறேன். இங்கு ஒரு பெண் தன் காதலைச் சொல்லுகிறாள். இவ்வளவு அழுத்தம் திருத்தமாக ஒரு கடிதத்தை, அல்லது காதலை எந்த ஆணும் உரைக்க முடியாதென்றே நினைக்கிறேன். 

மேலும் இத்தொகுதியில் இருக்கும் இன்னொரு கவிதைக்காக கவிஞரை நாம் கைகூப்பலாம். நாம் கடக்க முடியாதவிடத்தைக் காட்டித் தந்ததோடு ஒரு கவிஞனாக எதைக் கையாளுவாது என்ற வித்தை கைவரப்பெற்றிருக்கிறார் அவர். அவருக்கு என் வாசக மரியாதையைத் தாழச்செலுத்துகிறேன் 





1

என்னைய அடிங்கொ
கொல்லுங்கொ
கண்டதுண்டெமா வெட்டிப்போடுங்கொ
காவலுக்கு ஆள் போடுங்கொ

நிங்கொ பாத்து வெச்சிருக்கெற
மாப்புள்ளைக்கெ என்னெயக் கட்டிக் வெய்ங்கொ
கட்டிக்கெறென்

அவனுக்கு புள்ளெ பெத்துத் தறச் சொல்லுங்கொ
பெத்துக்கெறென்

ஆனா
என்னிக்காவ்து ஒரு நா
எங்கெய்யாவது ஒருவாட்டி

அவரு வந்து ‘ வா போயர்றலாம்’ னு
கூப்பிட்டுப் போட்டார்னு வெய்ங்கொ
என்றெ அப்பென்மேலெ சத்தியமாச் சொல்றென்

போட்டது போட்டபெடி கெடக்க
அப்பெடியே அவருகூடெப் போயிர்ருவென்…ஆமா.




இக்கவிதையின் வலியை உணர்ந்த நவீன வாசகர்கள்  எழுதலாம்.




2


முன்னிரவில்
பேருந்து நிறுத்தத்தில்
தனியாகக் காத்திருந்தாள்
என் விரோதியின் மனைவி

வியர்த்த முகமும்
அதைரியப் பார்வையுமாய்
அது
ராக்குற்றங்கள் மலிந்த பகுதி

என் பேருந்துகள் வந்தபடியிருந்தாலும்
ஏறாமல்
துணை அறிவிக்கும் தோரணையில்
பாவனையாக நின்றுகொண்டிருந்தேன்

அவளுக்கான வண்டி
ஒரு வழியாக வந்தது

ஏறியவள் திரும்பிப் பார்த்து
உதிர்த்தாள்
என் பகை கரைக்கும் புன்னகையை

என் பேருந்துகளை இழந்திருந்த நான்
மெதுவாக நடக்க ஆரம்பித்தேன்
ஒரு பாடலை பாடியபடி.




இக்கவிதையில் துளிர்த்த மந்திரச்சொல் இதுவாகத்தானிருக்கும்.
பகைகரைக்கும் புன்னகை…

No comments:

Post a Comment