Saturday 20 October 2012

பாதசாரி


      




மீனுக்குள் கடல்

என் மனக் குரங்குக்கு
உடைகள் தைத்தே கை சலித்தோய்ந்தது
என் யாக்கையின் காலம்

நேற்றிரவு வரை
மடங்காக்கத்தி
குரங்கின் கையில்
ஆப்பிள் நறுக்க என்றோ ஒரு
ஆதாம் கொடுத்தது

மீனுக்குள் கடலில் அலை ஓய்ந்த மோன இரவு

ஏதோ ஒரு விதமாய் ஒரு அசதியில்
கத்தி கைநழுவ குரங்கது
மெய் புதைந்து தூங்குகிறது

ஒரு விழிப்பின்  தருணம் திடுமென
குரங்கின் கனவில் புகுந்துவிட நான்

கண்டேன் ஒருத்தியை
திரை இன்றி
இலை தழை கூட மேலின்றி நிறை
நிர்வாணத்தில் ஒளிரக்கண்டேன்
அவளே என் அம்மாவும் அவளே என் 
தங்கையும் அவளே என் மனைவியும் அவளே
என் குழந்தையும் அவளே.....





  பெயர்

கடவுள் பெயரோ இயற்கை பெயரோ
சூரியன் பெயரோ சந்திரன் பெயரோ
சனியின் பெயரோ மலையின் பெயரோ
மரத்தின் பெயரோ தலைவர் பெயரோ
தாத்தாவின் பெயரோ ராக்கெட்டின் பெயரோ
செல்லப் பிராணியின் பெயரோ
சர்க்கஸ் கோமாளியின் பெயரோ
ஆணின் பெயரோ பெண்ணின் பெயரோ
போல் ஏதுமில்லை
என்னை நானே கூப்பிட்டுக்கொள்ளும் ஒரு பெயர்
ரகசியமில்லை அது-


ஒரு பிச்சைக்காரன் என்னைக் கூப்பிடும்போது
ஒரு விபச்சாரி என்னைக் கூப்பிடும்போது
ஒரு பைத்தியக்காரன் என்னைக் கூப்பிடும்போது
ஒரு குஷ்ட ரோகி என்னைக் கூப்பிடும்போது
ஒரு அனாதை என்னைக் கூப்பிடும் போது
என்னை நான் கூப்பிடும்போது…..




No comments:

Post a Comment