Sunday 21 October 2012

குட்டி ரேவதி.





ஆண்மை இல்லை

அன்று மழையோ மழை
நதியின் மீதெல்லாம் மழைக்குஞ்சுகள்
அடிவயிற்றின் பயிர்மேடு
பரவசத்தில் சிலிர்த்து எழ
ரம்மியமான மந்தகாசப் புன்னகையை
உடலெங்கும் நழுவவிட்டபடி
மழை தரையிறங்கியது
நனைந்து உடலொட்டிய பாவாடையை
உயர்த்தி நின்றது காடு
ஓய்ந்த மழையை
அம்மாவின் சொல் மீறித்
திம்றிப்பறந்த பறவை சொன்னது
நினைவுகளின் தடயங்களை
மழையால் அழிக்க முடிவதில்லை
பகம் முழுதும், பின்னும்
அதன் பாடல் ஓயவேயில்லை
மகரந்தச் சேர்க்கைக்குப் பின் தளும்பும் மலர்
சோர்வுடன்

பூமியில் எங்குமே ஆண்மையில்லை.




நிர்வாணம்

உனக்கும் எனக்கும் அவளுக்கும்
நிர்வாணம் தான் பளப்பளப்பான ஆயுதம்,
குருதியின் வியர்வையில் நனையும்போதெல்லாம்
ஒரு பயிற்சியின் முழுமையை அடைகிறது
மரங்கள் நிர்வாணத்தை யடையும்போதுதான்
இறக்கைகள் துளிர்க்கும் பறவைகளாயின
சீனப் போர்வீரன் சொல்லுவான்;
‘உறையிலிருந்து ஒரு போது
வாளை வெளியே இழுக்காதே
அவசியமின்றி’
நிர்வாணம் வளர வளரத்
தீயின் கொழுந்தைப் போல்.
நிர்வாணத்துடன் வாழ்வது எளிதன்று
அது உன்னை அலைக்கழிக்கும்
உபயோகிக்கும் வாய்ப்பைத் தேடி
வாளை ஒருபோதும்
வெளியே இழுக்காதே அவசியமின்றி
அது துருப்பிடித்துச் சல்லடையானாலும்.
ஆனால் உன்னோடே
எப்போதும் வரித்துக்கொள் அதை.



No comments:

Post a Comment