Friday 19 October 2012

ஜெ.பிரான்சிஸ் கிருபா.






கடவுள் – கடல் – பரிசு

தனக்கென்று முடைந்திருந்த சின்னஞ்சிறு மரப்படகை
எனக்கென்று பரிசாகக் கொடுத்தார் கடவுள்.
உன் பாதைகளை வரைந்துவிட்டோம்
நீ பயணப்படலாம்.
வன்மம் மின்னும் உப்பு விழியுருட்டி கடல்
தன் பிரமாண்டத்தை உருவி பரிகாசமாகச் சிரித்தது.
நான் மிரண்டு என்னுடல் பயத்தில் நடுங்குவதைக் கண்டு
கடல்மேல் திரும்பி பரிகசிக்கும் பற்களைப்
பிடுங்கி எறிந்தார்

‘அவை இறுகிய கரும்பாறைகளாகக் கடவது’ என
எழுந்தது ஒரு கட்டளைக்குரல்.
அப்படியே ஆகிற்று.
திடுக்கிட்ட கடவுள் முகத்தைக் கடுமையாகத் திருப்பி
என்னிடம் கேட்டார் ‘ யார் நீ’
கண்களால் அவர் பார்வையை அதட்டியபடி
பணிவாகச் சொன்னேன்
இந்தச் சின்னஞ்சிறு மரப்படகுக்குச் சொந்தக்காரன்.



2 வானத்தைத் தோற்றவன்


பறவையொன்றிடம் நான் இன்று
பந்தயம் கட்டி தோற்ற வானத்துக்கு
வரவில்லை நிலவு.
நூல் பிறையளவு கொடையுமில்லை
எட்டிக்கூடப் பார்க்கவில்லை
யாதொரு நட்சத்திரமும்.
இப்படி பாழடைந்த வானம்
பார்த்ததேயில்லை இதற்கு முன்.
அவமானம் மிகுந்த இரவு
இதுவே கடைசியாக இருக்கட்டும்
சூதாடக்கூடாது இனி
வானத்தைப் பூமியில் வைத்து.


3

தெரிந்தோ தெரியாமலோ
உன் காலடி மண்னெடுத்து
ஒரு பூமி செய்துவிட்டேன்

உன் ஈரக்கூந்தலை
கடலாகச் செய்யும் முன்னே
கடந்து போய்விட்டாய்

உயரத்திலிருந்து சூரியனாய்
வருத்துகிறது ஒற்றைப் பார்வை
வெப்பத்தில் வறள்கிறது
எனது சின்னஞ்சிறிய பூமி
நீரூற்று தேடி கிணறுகள் தோண்டினால்
பீறீட்டடிக்கிறது ரத்தம்

கண்ணே
இரண்டொரு தீர்த்தமணிகளைத் தானமிடு.

No comments:

Post a Comment