Saturday 6 October 2012

ஆத்மார்த்தி விமர்சனத்திற்கு முன் வைத்த கவிதை.





கற்பம் 
- ஆத்மார்த்தி

ஒரு பாடலின் இடையிசையாய் கழிந்துகொண்டிருக்கிறது காலம்.
.
முப்பத்து ஐந்தாவது வரி துவக்கத்தில்என் மடியில் தலைசாய்த்து மரித்துப்போனாள் வயலட் கலரிங் கூந்தல்காரி.
பாடலின் இரண்டாவது வரியிலேயே கள்ளப்பகிர்வுக்குப் பின் திரும்பிவந்தவள் ஏறெடுக்காமல் குளியலறைக்குப் போகிறாள்.
எட்டாவது வரியின் இரட்டிக்கிற வார்த்தைகளின் வழியாக கழுத்தைத் திருகிக் கொலை செய்த பாவத்தின் வீச்சம் வழிகிறது.
இருபத்து இரண்டாம் வரி ஒலித்து முடிக்கையில் உன் மரணம் நிகழ்ந்துகொண்டிருக்கும்.
முதல் பல்லவி முடிந்து மீண்டும் முதல்வரி ஒலிக்கையில் உலகத்தின் ஒட்டுமொத்த வாதைக்குமான மருந்திடல் துவங்குகிறது.
சரணத்தின் மூன்றாம் வரியின் ஆறாவது வார்த்தை எல்லாக் கோரிக்கைகளுக்கும் செவிசாய்ப்பதாயிருக்கிறது.
சூன்யங்களின் பீடிக்கிற கரங்களனைத்தையும் வெட்டியெறிவதற்கான சூட்சுமம் எழுபதாவது வரியினுள் இருக்கிறது.
ஒப்புக்கொடுக்கிற தேவன்களின் மறைவிடங்களின் மீது ஒளி பாய்ச்சுவதாக எண்பத்தாறாம் வரி திகழ்கிறது.
எலும்புகளைப் பொசுக்கிக் கிடைக்கிற புகையெண்ணையின் மணத்தை தொண்ணூறாவது வரி கமழ்கிறது.
இரண்டாவது சரணத்தின் துவக்க வரியினுள் தேடல்களனைத்தும் முடித்துவைக்கப்படுகின்றன.
அதற்கடுத்த ஆயிரத்துப் பன்னிரண்டாவது வரியில் பூப்படைந்த பின்னரே உயிர்த்தல் நிகழ்கிறது.
சாவதற்குத் தயாரான கிழட்டுபொம்மைகளைக் கொன்றுவிளையாடும் பிள்ளையினங்களின் பேரொலி எட்டாயிரமாவது வரியில் வருகிறது.
பாக்கெட்டுக்களில் எல்லாவற்றையுமே காய்க்கிற ஒற்றை மரத்தில் அன்பின் பொட்டலங்களைச்சீந்துவாரில்லை என்ற குறிப்பு பதின்மூன்றாம்வரியில் தொனிக்கிறது.
மூன்றாவது சரணத்தின் ஒன்பதாவது வரியில் கடுக்கைக் கண்ணியனைத் தன் சடைபிரியொன்றில் தூக்கிலிட்டு நடனமாடுகிற குண்டலி எள்ளுகிறாள்.
நாப்பத்துமூன்றாயிரத்துப் பதினாறாவது வரியில் மீன்கள் எல்லாம் செத்து மிதக்கின்றன நீர்தளத்தில்.
பத்தொன்பதாவது வரியின் கடைசிக்கு முந்தைய சொல்லில் அணைந்துகொண்டிருக்கிறது வானம்.
பூச்சியம் தவிர வேறொன்றுமில்லை.




அய்யா இவ்வரிகளில்  உங்களுக்கு என்னென்ன வார்த்தைகள்  எல்லாம் தெரிந்திருக்கிறது  என பட்டியலிட்டிருக்கிறீர்கள். இந்த பட்டியலிடும் அறிவு முதலில் கவிதைக்கு சற்று தொலைவாக இருக்கவேண்டும். கவிதையில் நிகழும் கவிஞனின் பலகுரல் தன்மையானது கவிதையை மேலோட்டமாக வாசிப்பவனுக்கு வேலையை அதிகமாக்குகிறது. அந்த பலகுரல் தன்மையை ஒரு உடனடி உண்பொருளாக வேலைத்திட்டமாக பயன்படுத்தமுடியாது. குறைந்தபட்சம் அதைப் பயன்படுத்தும்படி மாற்ற வேண்டுமானால் அதன் பல குரல் தன்மையை அடையாளம் கண்டு அர்த்தங்களை தயார்செய்யவேண்டும். அதைப் புரிந்து கொள்ளப்பட வேண்டிய புதிய பிரதியாக வாசிப்பவன் மாற்ற வேண்டும். இங்கு மேற்குறிப்பிட்டதில் இரண்டுமே நிகழாததோடு வெறும் வார்த்தைக்குவியலாய் தலை குப்புற நின்றுகொண்டிருக்கிறது.  இவ்வெறும் வார்த்தைக்குவியல்களை வைத்தும் அதன் வடிவத்தை வைத்தும் நாம் இதைக் கவிதையென்று சொல்ல முடியாது.


கவிதைக்கே உரிய சொற்கள் சில இருக்கத்தான் செய்கின்றன என்பதை ஒரு வாசகாரக நீங்கள் உணர்ந்துள்ளீர்கள். ஆனால் எழுதும்போது அச்சொற்களை நீங்களே ஏதோ கண்டுபிடித்த விஞ்ஞானி போல் யுரேகா என்று குதித்து விடுகிறீர்கள். அய்யா பிரதிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட பிரதிகளை எப்போதும் தன்னுடன் வைத்திருக்கும். அதாவது நீங்கள் எப்போதும் முதல் வரியின் முதல் வார்த்தையிலிருந்து மட்டும் தொடங்குவதில்லை. இறுதியோ...இல்லை நடுவரியிலிருந்தோ கவிதை உருவாகலாம்.

ஆனால் நீங்கள் வார்த்தைகளை இடைவெளியில் கொன்று விடுகிறீர்கள். ஒன்று கவிதை எழுதுகிறபோதே அதை ஒரு வாசகனாக நீங்கள் இவ்வகைக் கவிதைகள் எவ்வகை வாசகனுக்கானது என்ற குறிப்பை உங்களது மனம் உணர்த்ததினாலும், அறிவகந்தை உங்களை ஒரு கவிஞர் என்று நம்ப வைத்து மேலும் சில வரிகளை எழுத வைத்துவிடும். ஒரு இடத்தில் கவிஞராக இருக்க வேண்டும் அதே சமயம் கவிதை எல்லோரிடமும் போய்ச் சேரவேண்டும், அது மட்டுமல்லாது வித்தியாசமாய் இருக்க வேண்டும் என்பதே உங்கள் நோக்கமாயிருக்கிறது.

இந்த பெருந்தவிப்பே சொற்களை குறுக்கும் மறுக்குமாக உடைத்து இன்னும் ரகசியத்தைப் பேசும் ஒரு மொழிபோல் உங்களை செயல்படுத்தியிருக்கிறது. வாசகர்களை ஏமாற்ற நாம் நமக்குத் தெரிந்த பட்டியல்களை இடுவது ஒரு ஜிக் ஜாக் வேலையாகும். ஆனால் ஒரு விமர்சகன் தனது வாசிப்பின் மூலம் உடைப்பது முதலில் இந்த ஜிக்ஜாக்கைத்தான். அதனால்தால் கவிதை காலியாகவும் செய்கிறது.

கவிதையின் நவீன வடிவம் இதுவாகத்தானிருக்கும் என நீங்கள் நம்பிய வடிவத்தை உங்களுக்குத் தெரிந்த வார்த்தைகளை வைத்து விளையாண்டிருக்கிறீர்கள். ஒரு குழந்தை அழுவதை ரசிக்க முடியும். அதற்காக அழவைத்து வேடிக்கை பார்க்கக் கூடாது. நீங்கள் உங்கள் வரிகளை வைத்து வேடிக்கை காட்டுகிறீர்கள். வேடிக்கை காட்டுவதை நம் ஊரில் வித்தை காட்டுவதாகத்தான் சொல்லுவார்கள். நீங்கள் காட்டும் இந்த வேடிக்கை வெகுவாக பல தமிழ் கவிகள் காட்டுவதுதான்.

ஆனால் அதில் பெரும்பாலோர் வேடிக்கை காட்டி யாசகம் கேட்டு அலுமினிய வார்த்தைகளை நீட்டுவார்கள். ஆனால் நீங்கள் உழைக்கிறீர்கள், கவிதைக்காக அதன் மொழிக்காக வார்த்தைகள் கைவரப்பெற நீங்கள் உழைப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. தொடர்ச்சியாக உழையுங்கள். பலன் உண்டு. மேலே நீங்கள் எழுதியதை கவிதை என்று தயவுசெய்து நம்பாதீர்கள், அது நீங்கள் உழைக்க வேண்டிய பொழுதுகளைத் தின்று மென்று துப்பிவிடும். நவீனத்துவத்தோடு இணையாததனைத்தும் கொல்லப்படுகிறது. ஆனால் அவை தற்கொலைகளாகவே பதிவு செய்யப்படுகின்றன.கவிஞனின் தன்னிலை  ஒற்றைப் பரிணாமம் கொண்டதல்ல...அதுவும் எல்லா மனிதர்களைப் போலவே அவனும் முரண்பாடுகளின் ஒட்டுமொத்தக் கூறுகளைக் கொண்டவனே.அது குறித்து நாம் நீங்கள் அனுப்பிய இரண்டாவது கவிதையில் பேசுவோம்.


ஓவியத்தில் தெறிந்த 
இந்திரியம்
நீந்தும்
குழந்தைகள்
பெயரற்ற தேசம்
பீங்கான்
கருவரை
கற்பம்
தரி
சிதை
பெயரழித்தல் ஒரு வகைச் சமன்பாடு.

- தீர்த்தமுனி


No comments:

Post a Comment