Friday 19 October 2012

கு.உமா தேவி






கடவுளின் கன்னியாஸ்திரி

தொண்டைக்குழியில்
துருத்தி அடைத்து நகர்ந்தபோது
மீன்செதில்களெனத் தரையெங்கும் வெண்துகள்
மிதந்துகொண்டிருந்தன

புற்றின் மேற்புறம் நீண்டுகிடக்கும்
வாய் மூடிய பாம்புகளைச் சிதைத்தெறியக்
காய்ந்த மாட்டுத்தோலினைப் போல்
மயிர்களுதிர்ந்த மைதானம்
சௌகர்யமாயிற்று

வலிகளை வரித்துச்சொல்லி அழத் தெரியாக்
கண்ணாடித் தேவதையின் உறைந்த பாதரசம்
வெற்றுத்தாளென
வெளியெங்கும் விறைத்து நிற்க
வாழ்தலில் அடிவயிற்றை
வருடிக்கொண்டிருந்த பீதாம்பரம்
உயிரினைக் குவித்துப் பிதுங்கிப்
பீய்ச்சியடித்த மாத்திரத்தில்
மாறுதலற்ற பருவமாகிய
பாவக்கோடையைக் கடந்து கொண்டிருக்கிறாள்
கடவுளின் கன்னியாஸ்திரி.



உறங்க முயன்றல்லாடுமோர் அடரிரவு



இடைவெளிகளற்றுப் பருத்துக் கனக்கிறது பருவம்
கூடவே உயிருறைய
நுண்வலியும் அப்பிச்செல்கிறது

சிறுகாற்றுக்கு அல்லாடும் பசுந்தழைகளாய்
மெல்லுரையாடலிலும் அதுவற்ற நிலையிலும்
முகத்தெளிவானது அறுபட

காலோய்ந்துத் திரும்பும்
பின்மாலைப் பொழுதில்
தாமத்தத்திற்கான காரணம் கேட்கும்
காப்பாளரின் கனிந்த பார்வைக்கு
ஏதேனும் சாக்கு சொல்லி

உள்துடிப்பில் உயிர் பொறி பறக்க
ஆடைநெகிழ்ந்தோடும் குளியறையுள்
தீய்ந்து கனக்க

சிறுநாசியில் மெல்ல நுழையும்
காமவாடை பழகாத அறையை
யாரோ தட்டிச்சென்றார்போல் தோன்றியது.

No comments:

Post a Comment