Saturday 6 October 2012

விமர்சனத்திற்கு ஆத்மார்த்திய அனுப்பிய வசுமித்ர கவிதை.






ஒரு காதல் கவிதை எழுத முடியாத விரல்களை என்ன செய்யலாம்......

வசுமித்ர.


என்ன செய்யலாம் கவிஞனை
ஆற்றாமையை
ஒரு ஒப்பற்ற துரோகத்தை
துரோகத்தில் ஊறித்ததும்பும் புன்னகையை
கனவுகளின் வாய்க்காலை
நஞ்சூறி விரியும் வெண்சிறகை
எடைகூடிய சொற்களைச் சுமக்கும்
கனத்த இதயத்தை

கண்ணீரின் வெதுவெதுப்பை
இயலாமையின் சாறை
கைவிடப்பட்டவனின்
இறுதிச்சடங்கை

கவிஞன் வானமும்
வெளியும்
சூன்யமும் இல்லாத
அகதி
தலைச்சிறந்த அயோக்கியன்
அனாதை

வழியிழந்த
பேதமறியா விரல்களால்
நாளும் எழுதிச்செல்கிறான்
பறவைகளே நிதானமாயிருங்கள்
வயல்வெளிகளில்
சொற்களை விதைக்கிறார்கள்

ஒரு பிரிவை எழுத விரும்பாத விரல்களை என்ன செய்யலாம்
அறிவீர்கள்
நண்பர்களே பிரிவின் உப்பும்
தகிக்கும் காழ்ப்பும்
பிரிவின் எரிப்பும்
சொல்லின் முடிவும்
இறுகி
உடைக்க முடியா உன்மத்தமடைகிறது

புணர்ச்சியில் வெம்பிச்சரியும் உடல்கள் கவிஞனுடையதில்லை
களைப்பு அவன் வரிகளைத் தீண்டுவதில்லை
விடை பெற்ற முத்தங்களை
முத்தகங்களீந்த வரியுதடுகளை
கனைக்கும் குதிரைகளின் கால் குளம்புகளை
கவிஞன் சொற்களாக்குகிறான்

ஒரு கூர் நுனித் தனத்தை
முரசென அறிவிக்கும்
கவிஞனின் கரத்தை
எப்படித் துண்டிக்கலாம்
வார்த்தைகளை இழந்த மௌனத்தை
உதட்டில் பீய்ச்சியடிப்பவனை
குருதியை யாசகம் கேட்பவனை
மண்டையோடுகளை காய்ந்த உதடுகளால்
அரவணைத்து முத்தமிடுபவனை
கவிஞனை
என்ன செய்யலாம்
விரல்களை
கரத்தை
கவிஞனை
கவிதையை

அவன் விரும்பாத நிதானத்தை
நிதானத்தின் பதட்டத்தை
என்ன செய்யலாம்
என்ன செய்யலாம்
ஒரு கவிஞனின் பிணத்தின் முன் சிறுநீர் பெய்யலாம்
அல்லது
பதிலுக்கு அவனது கவிதையை வாசிக்கலாம்
கவிதையை முடிக்கும் போது
பெய்யும் சிறுநீரை நிறுத்திவிட்டு
கண்களில் வரவழைக்கலாம்
கனங்கூடிய உப்பை.


பத்திரிக்கையாளர்கள் அமைதியாக இருக்கும் நாட்டில் ராணுவம் புன்னகையுடன் நுழைகிறது...



அப்படித்தான் இருக்கிறது
பத்திரிக்கையாளர்கள்
அமைதியாக
இருக்கும்போது
நாடு
தன் நிர்வாணத்தை
அமைதி நிரம்பிய
எள்ளலுடன் ஒருமுறை கவனித்துக்கொள்கிறது

உண்மையில்
பத்திரிக்கையாளர்கள்
நாட்டின்
குடிமக்களுக்கு
உள்ளது உள்ளபடி
மிக நேர்த்தியாக இல்லாவிடினும்
அசிங்கமாகவாவது
குடிமக்களுக்குக் காட்டிக்கொடுக்கவேண்டும்
மாறாய்
அவர்கள் விளம்பரம் செய்கிறார்கள்

விளம்பரம்
மக்களை
அவர்கள்
விரும்பவியலாதவாறு
வெறுக்க வெறுக்க
வன்புணர்ச்சி செய்கிறது

காகிதங்களிலோ
பத்திரிக்கையாளர்கள்
வசந்தங்களை இசைத்துக்கொண்டிருக்கின்றனர்

அறியமுடியாத துப்பாக்கிகளின் வர்ணனையை
ஆட்சியாளர்கள்
செய்திகளில் ஒளிபரப்புகிறார்கள்

ஆண்களின் இறுகிய பிருஷ்டமும்
பெண்களின்
தேர்ந்தெடுக்கப்பட்ட
நளினமான சதையும்
குடிமக்களுக்குக் காட்டப்படுகையில்
அரசியல்வாதிகள்
அதிகாரத்தைக் கைப்பற்றுகின்றனர்

பத்திரிக்கையாளர்கள் மௌனமாக இருக்கும் நாடு உருப்படப்போவதில்லை

ஆம்
மக்கள்
நிர்வாணத்தை எப்பொழுதும்
கொண்டாடிக் கொண்டிருக்கப்போவதில்லை

நிர்வாணம் என்பது அரசின் தத்துவார்த்தச் சொல்
அம்மணம்
இது
மக்களின்
சொல்லாக இருக்கிறது

நிர்வாணமாக இருப்பதென்பது
அரசியல்வாதிகளுக்கு உகந்ததாக இருக்கையில்
அம்மணத்தை மக்கள் வெறுக்கிறார்கள்

குழந்தைகள் அம்மணத்தை கேலி செய்கிறது
நடிகைகளின் நிர்வாணங்கள்
நிர்வாணத்தில் நாகரீகம் செலுத்தப்படுகையில்
அம்மணத்தில் பசி தன் விகாரத்தைக் காண்பிக்கிறது

மக்கள்
அமைதியாய் இருக்கின்றனர்
சொல்லமுடியாத
வார்த்தைகளை
திறக்க முடியா உதடுகளால் கடித்து மென்றபடி
அம்மணக் குருதி
கசியும் வரை

மக்கள்
எப்பொழுதும் இப்படியே இருக்கப்போவதில்லை
கசியும் குருதியில்
ஆட்சியாளர்களுக்கான வெடிகுண்டின்
கந்தகவாசனையை அறிந்து கொண்டிருக்கிறான்
கவிஞன்

அவன் நாசி எப்பொழுதும் மக்களையே நோக்கியிருக்கவேண்டும்
இப்படியாகத்தான் கவிஞன் தன்னை உற்பத்தி செய்கிறான்
இறந்து விடாமல்

பத்திரிக்கையாளர்களுக்கு
தகவல்கள் இருக்கிறது
செய்திகள் இருக்கிறது

உண்மையில் அழும்
குமுறும்
நெஞ்சில் அடித்துக் கதறும்
பத்திரிக்கையாளனே நாட்டுக்குத் தேவை
பத்திரிக்கைகள் பொய் சொல்லுகையில்
பத்திரிக்கையாளன் தலை குனிகிறான்
வரலாறு மிகுந்த வன்மத்துடன் அவனை நகர்ந்து செல்கிறது

பத்திரிக்கைகளுக்கு தெரியாத பத்திரிக்கையாளன்
அல்லது கவிஞனுக்குத் தெரியும்

உண்மையில்
பசித்த மக்கள்
உணவை உற்பத்தி செய்வதை விட வெடிகுண்டுகளை
உற்பத்தி செய்யவே விரும்புவார்கள்
பசி
வெடிகுண்டுகளின் புன்னகையைத் தயாரித்துவிடுகிறது

மக்கள்
புன்னகை செய்யும்பொழுது
அரசு மௌனமாகிறது.



அன்பு ஆத்மார்த்தி இவைகள் கவிதைகள்தான். அறிமுகத்திற்கு நன்றி.

அய்யா...இரு கவிதைகளையும் வாசித்தேன்.இவையிரண்டுமே காதலையும் அரசியலையும் அதனதன் போக்கில் வைத்து மத்தியஸ்தம் பண்ண ஒரு வாசகனை முன்வைத்து நகர்கிறதய்யா…

முதக் கவிதை காதல் கவிதை எழுதியவர்களை விட எழுதுபவர்களை காரணம் கேட்டு கவிதை தன் உடலிலிருந்து கேள்விகளை எழுப்புகிறது,  கவிதைக்குரிய பண்புகள் இதனுள் மொழியில் ஒற்றறியும் தன்மையைக் கொண்டு விரட்டியபடியே செல்கிறது,. கவிதைக்கான வரிகளை விதந்தோதுவதோடு அவற்றின் கைகட்டல்களைச் சுட்டிச் செல்லுகிறார்.

ஒரு
ஒரு கூர் நுனித் தனத்தை
முரசென அறிவிக்கும்
கவிஞனின் கரத்தை
எப்படித் துண்டிக்கலாம்

இவ்வரிகள் கவிஞரய்யாவின் காமத்தின் சித்திரங்களை வாசிக்குமாறு நவீன வாசகனின் முன் வீசிவிட்டுச் செல்கிறது. பெண்களை பொருட்களென பயன்படுத்தும் ஆண்களின் விரல்களை கத்தரித்துச் செல்கிறது,  அதேபோல,

கவிஞனின் பிணத்தின் முன் சிறுநீர் பெய்யலாம்
அல்லது
பதிலுக்கு அவனது கவிதையை வாசிக்கலாம்
கவிதையை முடிக்கும் போது
பெய்யும் சிறுநீரை நிறுத்திவிட்டு
கண்களில் வரவழைக்கலாம்
கனங்கூடிய உப்பை.

என்ற வரிகள், கவிஞனின் உள்ளுணர்ச்சியை சல்லடையிட்டு அவனது தோல்விகளை அறிந்து எழுதிய வார்த்தைகள் அய்யா இவை.

இரண்டாவது கவிதையில் கவிஞரய்யா செயல்படுத்திய உத்தியாக   முதலில் தனக்கான கேள்விகளை கவிஞரய்யா தொகுத்துக்கொண்டு நான் முன்னமே கூறிய கவிதையின் கூறான ஒரு தொகுப்புத்தியை இதில் உருவாக்கியிருக்கிறார். சம்பந்தப்பட்ட கவிதையை அரசியலை, அரசியலமைப்பின் ஒரு தூணைத் தாக்கி எழுதப்பட்டிருக்கிறது. எல்லா வார்த்தைகளிலும் ஒரு நவீனப் பார்வை நகர்ந்தபடியே உள்ளது. கவிதையின் தன்மைகள் இரண்டு தளங்களாக தன்னைப் பிரித்தபடியே செல்கிறது. 

ஒன்று கவிஞரய்யா  இரு கவிதைகளிலும் தனது பாணியாக கவிஞரய்யா  பேச்சுத்தொனியை மையமாக வைத்து பயன்படுத்தியிருக்கிறார். இதுதான் அவரது பாணியாக இரு கவிதையிலும் நீண்டு செல்கிறது. பத்திரிக்கையாளனை அவன் மொழியில் தாக்க கவிகளின்  வாக்கியங்களை அமைத்தததோடு இது வாசகனின் ஒரு சார்பை விளக்குகிறது.  இரண்டு கவிதைகளின்  எளிமை எவரையும் உள்ளே வரச்சொல்லக் கூடியது. உதாரணமாக

“பத்திரிக்கையாளர்கள் மௌனமாக இருக்கும் நாடு உருப்படப்போவதில்லை”

"நிர்வாணம் என்பது அரசின் தத்துவார்த்தச் சொல்…"

மக்கள்
புன்னகை செய்யும்பொழுது
அரசு மௌனமாகிறது.


மற்றும்

நிர்வாணமாக இருப்பதென்பது
அரசியல்வாதிகளுக்கு உகந்ததாக இருக்கையில்

என்ற வார்த்தைகளின் பின்னால் தத்துவக்குறிப்புகள் சகல மையத்தினரையும் நிர்வாணத்தின் வெவ்வேறு திசை நோக்கி  வேறுபடுத்திக்காட்டுகிறது.மேலும் இரு கவிதைகளுமே சாபத்தின் தொனியை கொண்டிருக்கிறது. நிர்வாணத்தை சகலருக்கும் பொதுவாய் அதேசமயம் வெவ்வேறு உடல்களுக்கு விளக்கிக்காட்டுகிறார்.

நண்பர்களே பிரிவின் உப்பும்
தகிக்கும் காழ்ப்பும்
பிரிவின் எரிப்பும்
சொல்லின் முடிவும்
இறுகி
உடைக்க முடியா உன்மத்தமடைகிறது.

இவ்வரிகள் கவிதைக்கான மொழியை தன்வயப்படுத்திக் கட்டுக்குள் 
கொண்டிருக்கிறது. 

வணக்கம் அய்யா..









No comments:

Post a Comment