Tuesday 2 October 2012

அன்பான வாசகருக்கு...




கவிதை தன்னளவிலேயே எளிமையானது. எளிமை என்ற பதம் கூட சற்று மிகையுணர்ச்சிகொண்டதாக அமையும். அந்தளவுக்கும் கீழான எளிமையே கவிதை. அதன் இயல்பே அதுதான். அதனால்தான் அது வசீகரிக்கிறது. கவிதையுலகம் மிக நேரடியாக வாசகரைச் சார்ந்திருந்தாலும் அது தன்னளவில் தனித்தே இருக்கிறது, கவிதை அழகானதும் கூட, அது திட்டமிட்டு ஒப்பனைகளால் ஆன அழகல்ல். அதற்கேயுரிய அழகு. கிராமத்தில் முள்ளோடு விளையும் கற்றாழைப்பழத்தையொத்த, அதற்கு நிகரான ரோஜாவையொத்த அழகும் கூட. நமது வியாக்கியானப் புலிகளின் ஸ்டாண்டில் தொங்கும் விளக்கப்பட்டு ஜொலிக்கும் அழகை எடுத்து எதன் மீது போட்டாலும் அது வக்கிரத்தை அளவுக்கதிகமாக் கூட்டித் தருகிறது.

கவிதைகளை வார்த்தைப் போர்வைகளால் மூடுபவர்கள் அதன் எளிமையை மூச்சுத் திணற வைத்துக் கொன்றே விடுகிறார்கள். வெளிப்படுத்துகிறேன் என்பவர்களோ வெட்டவெளியில் பொசுக்கிக் கொல்கிறார்கள். ஆனால் கவிதை அவர்களின் அகத்தாக்கத்துக்குள் எவ்விதம் மாற்றமும் அடையாமல் அப்படியே ஒரு பாறையாய் கனத்துக்கொண்டிருக்கிறது. கவிதையை அணுகுபவர்களுக்கு கல்வியில்லையேல் அவர்களை இலக்கணம் தலைகுப்புற அவர்களை தள்ளி விடும், ஆனால் கவிதை இலக்கணத்தில் அமைவதல்ல. இதுவே கவிதையின் முதல் விதி.

பெரும்பாலும் ஜப்பானிய ஹைக் – கூக்கள் இலக்கணத்தை அகற்றிவிட்டு அங்கு எளிமையைக் கொண்டு வந்துவிடுகிறது. அதனால்தான் அது கவிதையாக மாறுகிறது. கவிதையை விளக்க கவிதையை எழுதிக்கொண்டிருக்கமுடியாது என்பதுதான் அடிப்படை. ஆனால் கவிதைக்கு தொடங்கு களம் நிகழ்த்துகளம் எதுவுமேயில்லை.
என் அம்மா நீண்ட நெடுங்காலமாக உழைக்கிறாள் ஒரு பிடிச் சோற்றுக்காக…அவளது உள்ளங்கையில் குவிந்திருக்கும் சோற்று ருசியில்தான் கடவுளும் சம்மணமிட்டு தனக்காக பருகையை பெற்றுக்கொள்கிறார். இவ்வகையிலான எளிய வரிகளின் மூலம் அது உணர்த்தும் பொருளின் மூலம் கவிதையின் சிறு நடைபயிற்சியைக் காணலாம்…

எனக்கொரு கனவு இருக்கிறது என லூதர் சொன்னதை இதன் கீழ் பொருத்திப் பார்க்கலாம். அந்த வரிகளை நாம் எத்தனையோ முறை எத்தனையோ இடங்களில் சொல்லியிருக்கலாம், ஆனால் அவ்வரிகளைச் சொல்ல லூதர் வாழ வேண்டியிருந்தது, அந்த வரிகளுக்காக தன் வாழ்க்கையை  ஒப்புக்கொடுக்க வேண்டியிருக்கிறது. இன்றைய அரசியல்வாதிகள் மேடையில் ஆற்றுவது பெரும்பாலும் கவிதைதான். எந்தளவுக்கு கவிதையை நாம் தாங்கி, தோள்கள் வலிக்கத் தூக்கிப் பிடிக்கிறோமோ அந்த அளவுக்கு தன் உடலை கீழே இறக்கிக் கொள்ளுகிறது. கவிதை எழுதுகிறவர்கள் தங்களது வாழ்க்கையை கவிதைக்கு ஒப்புக்கொடுப்பதில்லை. ஒப்புக்கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை ஆனால் சற்று பணிய வேண்டும். ஆயுதத்தைப் பயிற்சி இல்லாது ஆயுதத்தை எங்கனம் கையாள முடியும். இங்கோ சிறுகுழந்தைகள் காலகட்டி அட்டைக்கத்திகளை வைத்துக்கொண்டு யுத்தங்களுக்கு வருகின்றன. கவிஞன் அவர்களைத் தூக்கிக் கொஞ்சிவிட்டு உன்னை போல் ஒரு வீரன் இல்லையே குழந்தை என இறக்கிவிட்டுச் செல்வான். ஆம் நண்பர்களே ….


கிரேக்க ஞானிகளில் ஒருவரான ஜெனஸை நீங்கள் அறிந்திருப்பீர்கள். எந்த அளவுக்கு இலகுவானவரோ அந்தளவுக்கு எளிமையான குணங்களை உடையவர். மிக முக்கியமாய் கவிஞர்.  ஒரு கவிஞன் தன் வாழ்நாளை கவிதையிடம் ஒப்படைப்பதென்பது எவ்வளவு வசீகரமானது. அது உண்மையில் பேருவகையும் கூட. ஜெனஸ் கவிதைகளிடம் பற்றுக்கொண்டதனால் அதன் எளிமை அவரை எதிலும் பற்றுக்கொள்ளவிடாமல் ஆக்கியது. அதனாலேயே அவர் ஞானியென்றழைக்கப்பட்ட கவிஞரானார். ஆனால் ஜெனஸோ ஞானியை உதறிவிட்டு கவிதையை மட்டும் தன்னோடு வைத்துக்கொண்டார், ஏனென்றால் ஞானத்திற்கு கவிதையிடம் இருக்கும் அறுவெறுப்பை கவிதையால் அறிந்தவர் அவர்.

எதன் மீதாவது பற்று வைக்கும் போது அது அசிங்கத்தை உன் மீது பூசி விடுகிறது. ஒரு பொருளைப்போல கையில் இறுக்கமாகப் பிடிக்க ஒத்துப் போக வேண்டியிருக்கிறது. அதனால்தான் உன்னதத்தை தூக்கி தூர எறிந்துவிட்டு எளிமையைக் கையில் வைத்துக்கொண்டார். எளிமையோடு இருப்பதென்பது ஆளுமைகளுக்கு சாபம் அல்லவா. அரசு அவரது எளிமை எல்லோரையும் பற்றிப் பீடிக்கும் நோய் எனத் தெரிந்து அவரைக் கைது செய்ய யோசனை செய்துகொண்டிருந்தது. ஆனால் அதற்கு முன்னர் அவர் அடிமை வியாபாரிகள் அவரை விலைக்கு விற்க நினைத்தனர். அவரைப் பிடிப்பது மிகக்கடினம் என வியாபாரிகளுக்குத் தெரியும். ஜெனஸ் கிட்டத்தட்ட டார்ஜானைப் போல இருப்பார். ஒரே நேரத்தில் எட்டு பேரை தூக்கியடிக்கும் எளிமையும் வலிமையும் அவருடையது. பிடிக்க வந்தவர்களோ நான்கு பேர்கள். அவரைப் பிடிப்பது சிரமம் என உணர்ந்த போது அவரைச் சூழ்ந்து கொண்டனர்.


ஜெனஸ் சொன்னார் பயப்படாதீர்கள் குழந்தைகளே நான் உங்களுடனேயே இருப்பவன். என்ன விசயம் சொல்லுங்கள், எதுவும் பிரச்சினை இருந்தாலும் சொல்லுங்கள் தீர்த்து வைக்கிறேன் என்றார். அவர்கள் இந்தப் பிரச்சினையை நீங்கள் தீர்த்து வைக்க விரும்ப மாட்டீர்கள் என்றார்கள். அவரோ நான் தீர்த்து வைக்காத பிரச்சினைகள் இருந்தால் அது எனக்கு சவால்தான் பரவாயில்லை சொல்லுங்கள் என்றார். அவர்கள் இதுதான் எங்கள் எண்ணம் உங்களை பிடித்துக்கொண்டு போய் விற்கவேண்டும் என்றார்கள். அவர் சரிதான் பிறகு எதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறீர்கள்? யாருக்காக? இதோ என் கைகள் ஆரம்பியுங்கள் என்றார்.

அவர்களால் அதை நம்பவே முடியவில்லை. ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். இதில் என்னவோ இருக்கிறது எனச் சந்தேகப்பட்டார்கள். இப்படி விட்டுக்கொடுக்கிறாரே! அவர் சொன்னார் கவலையே வேண்டாம் நான் சண்டையே போடமாட்டேன். நான் அப்படியே மிதந்து போகிறவன் அதுதான் என் வாழ்வின் போக்கே. எனவே நீங்கள் என்னைப் பிடித்துக்கொண்டு போகலாம் என்னை சிறை பிடித்துக்கொள்லலாம். முழுமைக்கு அதுதான் வேண்டுமென்றால் நடக்கட்டும் என்றார் ஜெனஸ். அவர்களுக்கோ மறுபடியும் பயம். என்றாலும் முயன்றார்கள். அப்போது அவர்களுக்கு தன்னம்பிக்கை வந்துவிட்டது. அவர் சண்டை போடப் போவதில்லை.

விலங்கிட்டார்கள். அவர்களோடு அவர் போனார். ஆனால் அப்படிப்பட்ட மனிதரை யாரும் அடிமையாக்கிக்கொள்ள முடியாது. அவரோடு நடந்து போனபோது அந்த நான்கு பேரும் முட்டாள்களாகத் தெரிந்தார்கள். ஜெனஸ் சொன்னார். பயமே வேண்டாம். அந்த சங்கிலிகளெல்லாம் வேண்டியதே இல்லை. நான் எப்போதும் உங்களோடு வருகிறேன். உங்களை விலகிப் போகவே மாட்டேன். அவர்களுக்கு பயமோ கூடிக்கொண்டிருந்தது. அவர்களுக்கு என்ன ஆள் இவன் எப்படிப்பட்டவன்?

ஆனால் அவர் சொன்னதையெல்லாம் கேட்டு நடந்து கொண்டார்கள். உயர்ந்தவர் உயர்ந்தவர்தானே. சிறையில் கூட தலைவன் தலைவனாகவே இருக்கிறான். போகப் போக அவர்கள் தன் பிரச்சினையை அவரிடம் சொல்ல ஆரம்பித்தார்கள். அவர்தான் அவ்வளவு மகிழ்ச்சியான ஆளாயிற்ரே. வெகு பரவசமாக இருந்தார். இந்த உலகத்தைச் சேர்ந்தவரைப் போலவே இல்லை.

சீக்கிரத்தில் தோழர்களாகிப் போனார்கள். தோழர்கள் மட்டுமல்ல சீடர்களாகிப் போனார்கள். ஜெனஸை விற்க சந்தைக்குப் போய்ச் சேரும்போது அவர்கள் அவரது சீட்ர்களாகவே ஆகிவிட்டார்கள்னார்கள். இவர் குருவாகிப் போனார். குருவே இதைச் சொல்லுங்கள் …குருவே அதைச் சொல்லுங்கள்…குருவே இதென்ன அதென்ன என்றார்கள். அவரோ என்னை விற்பதற்கு வந்திருக்கிறீர்கள். அதை மறந்து போகாதீர்கள், உங்களது உணர்வு மங்கிப் போனதா என்ன? மறக்காதீர்கள், எதற்கு என்னைப் பிடித்து வந்தீருக்கிறீர்கள் என்பதை மறக்காதீர்கள் என்றார். அவர்கள் அதை நாங்கள் இபோது செய்யமுடியாது, ஆனால் அவரோ கலவலையே படாதீர்கள் உங்களுடைய திட்டத்தைக் கைவிடாதீர்கள். உங்களுக்காக நான் இதைச் செய்கிறேன். அவர்களால் நம்பவே முடியவில்லை. என்ன செய்யப் போகிறார்?

பிறகு அவர்கள் சந்தை மேடைக்கு வந்து சேர்ந்தார்கள். எல்லோருக்கும் அவரைப் பார்க்கும் ஆர்வம் வந்துவிட்டது. சந்தை முழுக்க அந்த அடிமை மீது ஆர்வம் கொண்டுவிட்டது. ஏனென்றால் இதற்கு முன் அவ்வளவு அருமையான அடிமையை அந்த சந்தை பார்த்ததேயில்லை.
ஏலம் கூறுகிறவன் வந்தான். ஜெனஸ் வந்து நிற்க அவன் ஜெலஸை ஏலத்தில் விட அவரை வர்ணித்தான். இவன் அருமையானவன், ஆரோக்கியமானவன் பலமிக்கவன், ஜெனஸ் குறுக்கிட்டார் ‘நிறுத்து. நான் அங்கே வருகிறேன். எப்படி ஒருவனை அறிமுகப்படுத்தி விற்பதென்று உனக்குத் தெரியவில்லை. ஏலம் கூறுகிறவன் கீழே இறங்கினான் அவர்தான் பலசாலியாகவும் அதிகாரத்தோடும் இருந்தாரே? ஜெனஸ் மேடையேறினார். எந்த அடிமைச் சந்தையிலும் நடக்காதது நடந்தது. ஜெனஸ் கூறினார். “அடிமைகள் எல்லோரும் இங்கே வாருங்கள், எஜமானன் ஒருவன் விற்கப்படுவதற்காக இங்கே வந்திருக்கிறான்….”

இங்குதான் கவிதை தொடங்குகிறது. அத்தனை எளிமையாக அத்தனை இலகுவாக.

பறக்கும் போது பறவை 
சிறகைப் பற்றிக்
கர்வம் கொள்ளுவதில்லை. 
அது 
பறந்து கொண்டிருக்கிறது....

2 comments:

  1. ஹைக்கூவுக்கு இலக்கணம் உண்டு, நண்பரே!

    மூன்றடிகளால் ஆனது. முதல் அடி ஐந்து அசைகளாலும், இரண்டாம் அடி ஏழு அசைகளாலும் இறுதி அடி மீண்டும் ஐந்து அசைகளாலும் அமைக்கப்பட வேண்டும். முதலடிக்கு இரண்டாம் அடி கருத்தாலோ காட்சியாலோ முரண்பட வேண்டும். மூன்றாம் அடி அதன் விளைவை உணர்த்தி வர வேண்டும்.

    மொழிமாற்றுகையில் அல்லது இன்னொரு மொழியில் எழுத முற்படுகையில் நாம், நம் மொழி அமைப்பு காரணமாக, அசைக் கணக்குக்கு எழுத வாய்ப்பில்லை. ஆனால் மூன்றடி எல்லை, முதலடிக்கும் இரண்டாம் அடிக்குமான முரண், மூன்றாம் அடி காட்டும் விளைவு இவற்றைக் கொணர முடியும். கொணர்ந்தால் நல்லது.

    பாஷோவின் இரண்டு ஹைக்கூ, எடுத்துக்காட்டாக:

    The old pond
    A frog leaps in.
    Splash!

    On a withered branch
    A crow has alighted:
    Nightfall in autumn.

    ReplyDelete
  2. அய்யா...ஹைக்கூவுக்கு வடிவம் சரி உள்ளார்த்தம் எதனி மையமாக வைத்து இயங்குகிறது....

    ReplyDelete