Monday 22 October 2012

யவனிகா ஸ்ரீராம்.





வீட்டு விலங்கு

பிறந்த குழந்தைகளை
உயிருடனோ பிணமாகவோ
குப்பைத் தொட்டியில் போட்டு விடுபவர்கள்தான்
நாய்களுக்கு  நல்லவகையான
புரதச்சத்துக் கிடைக்க உதவி செய்கிறார்கள்
நாக்கைத் தொங்கவிட்டவாறே
தலைகுனிந்தபடி நெடுஞ்சாலையில்
ஓடிக்கொண்டிருக்கும் நாய்
நகரமயமாகும் சூழலில்
அந்நியமாதலைக் குறிக்கிறது எனலாம்
நாய் வளப்பவர்கள் இரவில்
மெலிதான போதை ஏற்றிக்கொண்டு
அதன் பின்புறத்தைக் கால்களுக்குள் வைத்து
கரமைதுனம் செய்துவிட்டால்
தரைதேய முகம்பதித்து கால்நக்கி
ஆயுள் முழுதும் நமக்கு அடிமையாய்
இருப்பதைக் காணமுடியும்
வலுத்த மரத்தடியினால் அதன் மூளைப்பகுதியில்
ஓங்கி அடிக்கும்போது
காதுகளில் இரத்தம் வடிய
செத்துப்போகும் நாயனது
பந்துகளை எடுத்துவர குட்மார்னிங் சொல்ல
ஆளைக்கண்டு குறுக்கு நெடுக்குமாய் ஓடி
வாலாட்டி முனங்குவது வகையிலான
பாவ்லாக்களையெல்லாம் நம்மை
ஏமாற்றவே செய்து காட்டுகிறது
நள்ளிரவில் சோடியம் போன்று நாயின் கண்கள் ஒளிர்ந்தால்
அது கானகத்தின் அமானுஷ்யத்தைக் காட்டி
நம்மை அச்சுறுத்துகிறது என்று அர்த்தம்
சிலசமயம் கத்தியால் நம் கைவிரலில்
காயம் ஏற்படும்போது
சொட்டும் ஒருசில இரத்தத் துளிகளை
மௌனமாய் நக்கிவிட்டுப் போகும்
நாயை என்ன செய்வது.






கொழுத்த பிராணி

ஒரு பொக்லைன் சாலையில்
ஊர்ந்துபோகும்போது
அதன் கண்கள் ஆக்கிரமிப்புக்களைக் கவனமாக
உற்றுப்பார்க்கின்றன
மேலும் தரையைத் தூர்க்கும் அதன்வாய்
டினோசர்களைப் போல குடிசைகளைக் கவ்வி
தூர எறிகிறது
கால்களை வலுவாக ஊன்றி தலையைத்திருப்பி
அலறிக்கொண்டிருப்பவர்களையும்
குரைக்கும் நாட்டு நாய்களையும் கொத்தி விரட்டுகிறது
கொழுத்த அரசுப்பிராணியான பொக்லைன்
கழுதையின் ராடுபோலத் தன் ஹைட்ராலிக்
தண்டுகளைப் புளுத்தி எக்கும்போது பொலபொலவென
கண்மயங்கிச் சரிகின்றன கட்டிடங்கள்
ஒரு கணம் தனது நாவைச் சரேலென நீட்டி
வாய்ப்புறத்து மணற்துகள்களை நக்கிவிட்டு
உள்ளிழுத்துக் கொண்ட பொக்லைன்
தலையைக் குலுக்கி
கழுத்தை ஒருமுறை மேலும் கீழுமாக ஆட்டிவிட்டு
நாட்டுநாய்கள் பிந்தொடர புன்னகையுடன்
தன் மரவட்டைக் கால்களால் விரைந்துபோகிறது.






No comments:

Post a Comment