Wednesday 3 October 2012

சொந்தமாக விழுந்து உடைந்த கோப்பை. - முகுந்த் நாகராஜன்.








மனித சமூகம் வளரும்பொழுது, கவிதை தன்னை சடங்குகளிலிருந்து பிரித்துக்கொள்கிறது. நாகரீமடைந்த மனிதன் உளவியல் ரீதியான உள்வாங்குதலை எளிதில் செய்கிறான். கவிதையின் சந்தமே அவனுக்குப் போதுமானது. வார்த்தைக் கூட்டுகளின் முக்கியத்துவம் சகமனிதர்களுடன் அவனை மிக எளிதில் உறவுகொள்ள வைக்கிறது. வார்த்தைக்கும் கவிஞனுக்கும் இருக்கும் உறவைப் பொருத்தே கவி கைகூடுகிறது. தன் அகந்தையில் எழுதும் ஒரு படைப்பு கவிஞனின் வார்த்தைகளை பிணம் சுமப்பது போல் சுமந்துகொண்டிருக்கும். கவிதை அகந்தைக்கு எதிரானது, உண்மையில் அகந்தையைச் சுட்டியொழிப்பது. ஆனால் அகந்தையை அகந்தையால் அறிவது. இத்தகைய கவிஞனே நிகழ்காலத்தில் வாழ்கிறான். அவனுக்கு வளம்பொருந்திய இறந்த காலமும், வருங்காலமும் தன்னைத் திறந்து கொடுக்கிறது.

இந்தக் கருதுகோள் எவ்வளவுதான் கவர்ச்சிகரமானதாக இருந்தாலும் இதன் அடிப்படையில் நாம் அஸ்திவாரத்தை அமைத்துவிடமுடியாது. மேலும் இது நிரூபணம் செய்ய முடியாத அளவிற்கு உள்ல ஒன்றாகும். நமக்கு முடிந்ததெல்லாம் ஒரு வகைப்பட்ட உணர்ச்சிகர மொழியில் இருந்து. எழுதப்பட்ட நவீன இலக்கியம் உருவாயிற்று என்ற பொதுவகைப்பட்ட ஒன்றுதான். இந்த உணர்ச்சிகரமான மொழியை அடைந்தது என்பது முதலில் அனைத்து பாரம்பரிய இலக்கிய அமைப்புக்களையும் உள்ளடக்கியதாக இருந்தது. நவீனம் வளரும்பொழுது அதற்கென்ற இடத்தோடு நின்றது.

இங்கு கவிஞரய்யா தனது கவிதையை உணர்ச்சியற்ற முறையில் விவரித்து, அதுவரை உணர்ச்சியே அடையாத வாசகனை சட்டென ஒரு உணர்ச்சி உந்துதலுக்குத் தூக்கிப் போடுகிறது. வாசித்து முடித்ததும் ரசிக்கவோ…கைதட்டவோ, ஆஹா என்று சொல்லவோ இதில் எந்த இடமும் இல்லை. இக்கவிதையின் வெற்றி என்பதே இந்த இடத்தில்தான் இருக்கிறதாக கருதுகிறேன். புதிய சொற்களை அதன் இருப்பிடலிருந்தே கண்டுபிடிக்கிறார் இக்கவிஞர். இது இருந்த சொல்….உலக இலக்கிய மரபுகளில் கொண்டாடப்பட்ட இலக்கணச் சரிப்படுத்தல்களை கேலி செய்கிறது இக்குழந்தையின் சொல். வாசிப்போம் நண்பர்களே…





சொந்தமாக விழுந்து உடைந்த கோப்பை.

விளையாட்டில் வீட்டுப் பொருட்களை
காலம்காலமாக
உடைத்து வருகின்றனர் குழந்தைகள்
உடைந்த சத்தத்துக்கும்
ஓடிவந்து பெரியவர்கள் போடும் சத்தத்துக்கும்
நடுவில் இருக்கும் மௌனத்தில்
சிதறிய துண்டுகளில் இருந்து
தப்பிக்கும் வாக்கியங்களை
இயற்றுகிறார்கள்.
போன வாரம் கண்ணாடிக் கோப்பை ஒன்றை
கை தவறி உடைத்த அதிமதுரா
அவள் அம்மாவுக்கு

“ சொந்தமாக விழுந்து உடைஞ்சி போச்சு”

என்ற வாக்கியத்தைப் பரிசளித்தாள்.
உடைந்த கோப்பை இருந்த இடத்தில்
அந்த வாக்கியத்தைப் பொருத்தி வைத்து
வருவோர் போவோரிடமெல்லாம் எடுத்து எடுத்துக்
காட்டிக்கொண்டிருக்கிறாள் அவள் அம்மா.

No comments:

Post a Comment