Tuesday 2 October 2012

விமர்சனத்திற்கு நிஷா அனுப்பிய கவிதை.






நீட்சி

தேவதை ஸ்தானத்தின் உச்ச விளிம்பில் நிற்கும்
ராட்சஸியின் சாயல் உன் மீது

என் மகத்தான துரோகங்களின் கொப்பளிக்கும் திராவகம்
இயலாமையின் சர்ப்பம்சீறும் உன் தோள்கள்மீது

தளும்பிய உணர்வுகளின் ஸ்பரிசம் தழுவி மீண்ட
ஒப்பனைச்சாய வெறிக்கசப்பு உன் இதழ்கள்மீது

சில சமாதானங்கள்;சில சத்தியங்கள்
விம்மல்களினூடாக சில கண்ணீர்த்துளிகள்

கடக்க இயலுமா யுகங்களின் இடைவெளியை
மின்மினிப்பூச்சி ஒளிகொண்டு

கரைக்க இயலுமா சாத்தியப்பாடுகளின் எஃகுத்திரையை
நெக்குருகும் பிரார்த்தனைகொண்டு

காணாமல்போய்விட வற்புறுத்துகின்றன
பரிபூர்ணத்துவம் மிக்க ஒளிவட்டங்கள்

குற்ற உணர்வின் கனத்தசுமையுடன் நிலம் திரும்புகின்றன
தனித்துவத்தின் கூரிய இலக்குகள்

"சலக்குமிழி போன்றவென்றன் சிற்றுடற்கு மித்தனையோ
கலக்கமதை வைத்தாயென் கண்ணே நிராமயமே"*

*குணங்குடி மஸ்தான் அப்பா —


- நிஷா



சமீபமாய் விமர்சனத்துக்கு வந்த கவிதை இது.

இக்கவிதையிலும் வழக்கமாக நவீனம் தன் வேலையைக் காட்டியிருக்கிறது. சொல் விளையாட்டுக்களைத் தவிர இக்கவிதையில் எந்த அனுபவமும், அனுபவமின்மையும் காணப்படவில்லை. தான் ஏதோ ஒரு கவிதை எழுதிக்கொண்டிருக்கிறோம் என்ற எண்ணமே கவிஞரை வழி நடத்திச் சென்றிருக்கிறது. எஃகுத் திரையை- நெக்குருகி இது போன்ற எதுகை மோனைகள் கவிதையமைப்புச் சுவராசியத்தை வாசகனுக்கு அளிக்கலாம். தேவதை ராட்சஷி…இதுவும் அலுப்பூட்டும் நவீனத்தில் அறுவடை செய்து மேற்கொண்டு விதைக்க முடியாத பதராகி விட்டவைகளே.  இயலாமையின் சர்ப்பம் மகத்தான துரோகம் வெறும் வார்த்தைகளாகத்தான் இங்கு பயணிக்கின்றன. இவை தன்னளவிலேயே ஒரு மொழித்தனமையைக் கொண்டவையாயினும் கவிதைக்குள் இதன் இடத்தை தேர்வு செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். கவிதைக்கு இவ்வார்த்தைகள் பலம் சேர்க்கும் என்று கவிஞர் நம்பினால் இடத்தை சரியாக நோக்க வேண்டும் இல்லையேல் இச்சொற்களே கவிதையின் காலை மிக அருமையாக வாரிவிடும்.

உதாரணமாக முனியம்மாளின் காதில் ஷர்ப்பமேறி
மகத்தான
துரோகத்தை குப்பாமாவின் காதில் ஊதியது…

என்று இச்சொற்களை இடம் மாறுதல் செய்தால் எல்லாம் வீண்…கவிதையில் உலாவும் சமற்கிருத வார்தைகளை மொழிகையில் அதே சமற்கிருத மொழியை கையாளலாம். மலையாளத்தில் பச்ச மலையாளக் கவிதைகள் இந்நோக்கத்திற்கு எதிராக வெளிவந்தவையே.

உதாரணமாக


தொன்ய லோகலேசனக் 
காதில் ஷர்ப்பமேறி
மகத்தான
துரோகத்தை
அஷ்டத்யாயி செவியில் ஊதியது…


இதுவும் வடிவமே…ஆனால் வாசகரை வியக்கச் செய்யும் பலன்களே அதற்குண்டு. அவ்வளவே அய்யா…இதை கவிதை என்றழைக்க முடியாது.அய்யா கவிதையை பொருட்படுத்தி அனுப்பி வைத்தமைக்கு எனது பணிவான நன்றியய்யா…தொடரட்டும் உங்களது பணி. கவிதையில் நுழைவது நல்ல  விசயம் தொடர்ந்து முயற்சியுங்கள். குணங்குடி பாடல்களின் எடையில் கவிதையை வாசித்தாலும் கவிதை மேலே தூக்கமுடியவில்லை.

கவிதையை வாசித்து முடித்ததும், நல்லா…ருக்கு….எனற இழுவையோடு பதில் வரும். கவிதை எழுதியிருக்கிறாய் என இங்கு பரும்பாலோனோர் சொல்லுவதே அதன் வடிவ நேர்த்திக்காகத்தான்…இதை கவிதை என்று சொல்ல முடியாது. தங்களின் தொடர்ந்த மொழிப் போரட்டமே கவிதைக்குள் உங்களை கொண்டு சேர்க்கும் மனம் தளர வேண்டாம். உங்களால் முடியும்.


அய்யா...தங்களது படைப்பை அனுப்பி வைத்ததற்கு மனம் கனிந்த நன்றி.

No comments:

Post a Comment