Tuesday 23 October 2012

மாலதி மைத்ரி




குறுக்குவெட்டுக் காட்சிகள்

நம் உரையாடலின் இடையே
வண்ணத்துப் பூச்சிகள் இடம்பெயர்கின்றன
மரங்கள் வேரோடு சாய்கின்றன
கொலைகள் அரங்கேறுகின்றன
பறவைகள் இறகுகளை உதிர்க்கின்றன
நதிகள் வறண்டுவிடுகின்றன
தற்கொலைகள் நிகழ்கின்றன
கண்ணிவெடிகள் புதைக்கப்படுகின்றன
பேய் மழை சடைக்கிறது
தொடர் வெடியோசை நீளுகிறது
வனம் தீப்பற்றி எரிகிறது
நாம் மௌனமாகும் போது
ஒரு புல் முளைக்கிறது.



சவப்பேழையின் அரசன்

கவிஞனின் மனைவி
தன் சவப்பெட்டியை
தினமும் அறைக்குள்
திறந்து மூடுபவளாக  இருக்கிறாள்
அவளின் சீதனமாக வந்திருக்கலாம்
அல்லது
அவள் விரும்பித் தேர்ந்தெடுத்திருக்கலாம்

காலையில் வீட்டைப் பூட்டிக்கொண்டு
சுதந்திரத்தைச் சுவாசிக்க
கிளம்பும் கவிஞன்
தன் விடுதலையைப் புகழும்
கவிதைகளுக்கு முன்
மது தீர்ந்த புட்டிகளை
உடைத்துக் கொண்டாடுகிறான்
கூலிக்குப் புணர அழைத்தவளை
பணம் கொடுக்காமல் ஏமாற்றியோ
அந்நியப் பெண்களின் அறைக்குள்
அத்துமீறி நுழைந்த சாகசத்துடனோ
அன்றைய கலக நாளை
தன் வீர காவியத்தின் பக்கத்திற்குள்
தைத்து வைக்கிறான்

பின் சாமத்தில்
தன் ராஜ்ஜியத்தின்
கோட்டைக்குள் நுழைபவன்
பேழையைத் திறந்து மனைவியிடம்
தனது சாம்ராஜ்யத்தின்
வாரிசை உருவாக்கும்படி கட்டளை இடுகிறான்

அவளும் அவனுடைய
சவத்துக்குக் கொள்ளி வைக்கும்
புத்திரர்களை
ஈனத் தயாராகிக்கொண்டிருக்கிறாள்


No comments:

Post a Comment