Sunday 7 October 2012

வாசகக் கண்மணிகளே…




நான் எதிர்பார்த்தபடி கவிஞக்கண்மணிகள் உளறிக்கொட்டி அதற்கான பலாபலன்களை கவிதைகள் மூலமாக வைத்தார்கள். அகம் பிராமாஸ்மி…அவர்கள் இடும் சொற்கள் விமர்சகனின் மனிவி வரை இழுக்கும் நிலைக்குச் சென்றுவிட்டது. இனி கோமாளிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த என் மனம் ஒப்பவில்லை. இவர்கள் தொடர்ந்து நான் முன்னமே கூறியபடி மரம் மட்டை குளம் குட்டை கொக்கு குயில் இவைகள் மேல் கருணை கொள்ளட்டும்….ஆனால் இவர்களின் அக்கறை தாங்கள் கவிஞர்கள் என்பதே…இருந்தொழியட்டும். கடந்த கால புத்தகங்கங்களைத் துடுப்பாக்கி இந்த கழிசடைக் கவிஞர்களின் சாக்காடையில் பயணிக்கவோவென…எனதுள்ளம் பதறுகிறது…விடைகொடுங்கள்…கண்மணிகளே…இவர்களோடு பேச விழைந்த என் எண்ணத்தை நான் மனமுருகி படித்த புத்தகங்களின் எழுத்தாளர்கள் தங்களது செறுப்பால் என் மூளையில் அடிக்கட்டும். அறுவெறுப்பு வக்கிரத்தைச் சுமந்தி செல்லும் பன்றிக்கூட்டத்தில் மாட்டிக்கொண்டேனோ என்பதே இப்பொழுது என் அனுபவம்.

பெருகிறேன் விடை.
மலர்களை நாளும் மலரச் செய்ய
முயற்சிகள் பல செய்தேன்
பன்றிகள் தொழுவத்தில்
கட்டறுத்துப் பாய்கிறது

இனி மலர்கள் கருகி சாம்பலாகட்டும்…இனி தீர்த்தமுனி மலையேறுவான்…
வான் கூட்டம் கலைத்து
பறக்கட்டும் பறவைகள்


அதன் பின் தீர்த்த முனி
முடிப்பான்…
தன் கணக்குகளை…

விடைகொடுங்கள் வாசகக்கண்மணிகளே…

என்னுடன்  ஓரிரு வார்த்தைகள் விரிவாகப்பேசிய …திருவாளர்கள் கிருஷ்ண பிரபு, பாலமுருகன், ப்ரியா, ப்ரியா செல்லம், பொன் வாசுதேவன், மனோ மோகன், வா. மணிகண்டன், ஆத்மார்த்தி,. ரியாஸ் குரியானா, இசை, முருகன் ஆண்டிபட்டி, வேல் கண்ணன், ராம் சின்னப்பயல், கௌதம சித்தார்த்தன், ஞானி, நிஷா மன்சூர்,நிலா ரசிகன், நாட்டாமை, அமானுஷ்யபுத்திரன், ஆறுமுகம் முருகேசன், மனோன்மணி புது எழுத்து,Ken Tvlm, ராஜ சுந்தரராஜன், லக்‌ஷ்மிப்ரியா பாண்டியராஜ்,பெரியசாமி நடராஜன்,அபிலாஷ், அமிர்தம் சூர்யா, இடுகாட்டான் இதயமுள்ளவன்

இவர்களுக்கு மனம் கனிந்த வணக்கங்கள்.
விடைபெறுகிறேன் தங்கங்களே
நாளைய தலைவர்களே…

நான் கிளறிய விமர்சன வரிகளை உபயோகப்படுத்த நினைக்கும் கண்மணிகளுக்கு, அதை பிரதி செய்தோ இல்லை பாதுக்காத்தோ வைக்க இன்னும் உங்களுக்கு ஏழரை மணிகளை நேரங்களை ஒதுக்குகிறேன்



2 comments:

  1. அய்யா
    தங்களுக்கு நான் எழுதிய ஒரு கடிதம் உங்களிடம் அனுப்பும் முன்னமே விடை பெற்றீர்கள். வருத்தமே. நிலைத்தகவலுக்காக இந்த கடித்த்த்தை எனது தளத்தில் இடுகிறேன். நன்றி.
    இனிதே சென்று வாருங்கள்

    ஆதிரன்.
    அய்யா
    நண்பர்கள் உங்களை அறிமுகம் செய்தார்கள். நல்லது. உங்களைப் பாராட்ட சில விசயங்கள் இருக்கிறது. இறுதியில் வைத்துக்கொள்கிறேன் பாராட்டை. தீர்த்தமுனி என அறிமுகமாகி உள்ளீர்கள். யாரைத் தீர்க்க இந்த அவதாரம்? அல்லது அனைத்தும் படித்துத் தீர்த்து விட்டேன் என்கிற ஆனவ அவதாரமா? அல்லது தீர்ந்தமுனி என்பதுதான் எழுத்துப் பிழையாக தீர்த்தமுனி என ஆகிவிட்டதா. கவிதை என்றால் என்ன என்று விளக்கித்தள்ளியிருக்கிறீர்கள். கவிதை என்பது எளிமையிலும் எளிமையானது என்றும் அது வெற்று வார்த்தைப் பூச்சுக்களை கொண்டவை அல்ல என்றும் அர்த்தம் வரும்படியான வார்த்தைக்கோர்வைகளை செய்துள்ளீர்கள். இதை விளக்க ஜெனசஸ், லூதர் போன்ற (உங்கள் பார்வையில் அவர்கள் கவிஞர்கள்) மனிதர்களை துணைக்கு அழைக்கிறீர்கள். நல்லது. யப்பானிய வடிவமான ஹைகூ விற்கும் வென்பாக்கள் போல இலக்கணம் உண்டு என்கிற ராஜசுந்தர்ராஜனுக்கும் நேரடி பதில் தராமல் வேரொரு கேள்வியை முன் வைக்கிறீர்கள். மிகவும் நல்லது.

    அய்யா உங்களிடம் சில கேள்விகள்:
    நீங்கள் கவிதை விமர்சகரா?
    நீங்கள் கவிஞரா?
    அல்லது இரண்டும் கலந்த பிரவியா?
    நீங்கள் வாசகரா?

    நீங்கள் பதில் சொல்லவேண்டும் என்பதற்காக அல்ல இந்த கேள்விகள். நான் பதில் சொல்வதற்கு.

    நீங்கள் கவிதை விமர்சகரா?

    ஆம் என்னளவில் நீங்கள் ஒரு விமர்சகர். படிக்கும் கவிதைகளை பற்றிய உங்கள் பார்வையை தெளிவாக பதிவுறுகிறீர்கள். படிக்கிற கவிதையின் படைப்பாளியின் அனுபவத்தை ஒரு வாசகர் நேரடியாக பெறும்பொழுது அவருக்கு கவிதை மீதான விமர்சனம் தேவையற்றுப் போகிறது. அனால் நீங்கள் படிக்கிற கவிதைகளில் வேரொரு அனுபவத்தை கொள்கிறீர்கள். அதன் மூலம் படிப்பது கவிதையா இல்லையா என்கிற ஒரு தீர்மானத்திற்கு வருகிறீர்கள். அதுவரை சரியான விமர்சனமாக இருக்கும் உங்கள் வரிகள் தீர்மானமேற்பட்ட கணத்தில் செயலற்ற அல்லது பொருளற்ற ஒரு வார்த்தைக் குவியலாக மாற்றிவிடுகிறீர்கள். ஒரு விமர்சகன் தீர்மானமான ஒரு முடிவை முன் வைக்கலாமா..?

    உங்கள் பதிவுகளில் பொன்.வாசுதேவன், மகுடேஸ்வரன், வசுமித்ர ஆகியோரின் கவிதைகளை கவிதைகள் என தீர்மானித்துள்ளீர்கள். மற்றவர்களின் கவிதையை கவிதைகள் அல்ல என தீர்மானித்திருக்கிறீர்கள். அய்யா, கவிதையை தாங்கள் எந்த உரைகல்லில் உரசுகிறீர்கள். எளிமை/அறம்/பாசாங்கில்லாத் தன்மை/ சலனம்/ அல்லது அந்த உரைகல்லுக்கு நீங்கள் இட்டுள்ள வார்த்தை என்ன. மார்ஸீய உரைகல் எனச் சொல்லி காமடி செய்யமாட்டீர்கள் என நம்புகிறேன். எந்த படிக்கல்லை வைத்து கவிதைகளை எடை போடுகிறீர்கள் என்பது எனது தாழ்மையான கேள்வி.

    நீங்கள் கவிஞரா..?

    இல்லை. நீங்கள் எழுதியதாக நான் படித்த கவிதை:

    கடற்கன்னி.
    அந்த எல்லா மனிதரும் உள்ளேயிருந்தனர்
    நிர்வாணமாக அவள் நுழைந்த போது
    அவர்கள் குடித்துக்கொண்டேயிருந்தனர்
    அவள் மீதி காறித்துப்ப ஆரம்பித்தனர்
    அண்மையில் நதியில் இருந்து வந்த அவள்
    ஒன்றையும் புரிந்துகொள்ளவில்லை
    வழியைத் தொலைத்துவிட்ட அவள் ஒரு கடல்கன்னி
    அவளின் பளபளக்கும் தசையில் வசவுகள் வழிந்தோடியது
    அவள் பொன்னிற மார்பினை, கீழ்மை நனைத்தது
    அவள் அழவில்லை, கண்ணீர் துளிகளுக்குப் புதியவளானதால்
    அவள் அணிந்திருக்கவில்லை ஆடைகளுக்கு அந்நியமானவளானதால்
    சிகரெட் நுனிகளாலும் எரிந்த தக்கைகளினாலும் அவர்கள்
    அவளுக்குத் தழும்பேற்றினார்கள்
    சிரிப்புடன் அருந்தகத்தின் தரையில் அவளை உருட்டினார்கள்
    அவள் பேசவில்லை பேச்சென்பதை அவள் அறியாததால்
    அவள் விழிகள் தொலைதூரத்து அன்பின் நிறமாக்
    அவள் புஜங்கள் புஷ்பராகத்திற்கு ஒத்திருந்தன
    பவழஒளியில் அவள் உதடுகள் அசைந்தன
    சப்தமின்றி அவள் வெளியேறினாள் கடைசியில்
    அந்தக் கதவு வழியாக
    நதியைச் சென்றடையுமுன்னரே
    அவள் தூய்மையாகிவிட்டாள்
    மழியில் நனைந்த வெள்ளைக் கல் போல
    மீண்டுமொருமுறை
    மின்ன
    நீந்தினால் மற்றுமொருமுறை திரும்பிப்பாராமல்
    சூன்யத்திற்குள்
    அவளுடைய மரித்தலுக்கு நீந்தினாள்.

    -- continued

    ReplyDelete

  2. தொடர்கிறது...

    நல்ல வடிவம் அய்யா. இதில் உள்ள எளிமை எது அய்யா. இதில் எங்கு வார்த்தை பாசாங்கு இல்லை அய்யா. திரும்ப திரும்ப படித்தாலும் எளிமையைக் காணோமே. புஜம் – புஷ்பராகம் என பு - னாவுக்கு பு - னா வேறு. பவள உதடு.. அடடா. நிற்க: ’அருந்தகம்’ என்கிற வார்த்தை நீங்கள் சென்னைக்காரர் என்கிற தகவலை அளிக்கிறது. சாலையெங்கும் கடை போர்டுகளை அரசு தமிழ்ப்படுத்த சொன்னபோது மக்கள் ‘படுத்திய’ சொற்களில் ஒன்றுதான் இந்த அருந்தகம். சரி கவிதையின் உள்ளடக்கத்தை இவ்வாறு கொள்ளலாமா:

    தவறுதலாய் கடல்கன்னி
    குடிகாரர்கள் மத்தியில்
    நுழைந்தாள் நிர்வாணமாய்
    அவர்கள் காரி உமிழ
    அழத்தெரியாத
    அழகான அவள்
    வெளியேறினாள்
    மரணமுற்று.

    அல்லது ”குடிகாரர்களின் ஏளனத்திற்கு அவமாணமடைந்த நிர்வாணக் கடற்கன்னி சூனியத்தில் தற்கொலை செய்து கொண்டாள்” என வரி வடிவம் கொடுக்கலாம்தானே அய்யா.. எனக்கான வாசிப்பு இதை இப்படித்தான் பார்க்கச் சொல்கிறது. நீங்கள் என்னிடம் கேட்க க்கூடும் எனக்கான உரைகல் எதுவென. உங்கள் கல்லை பற்றி நீங்கள் சொல்லாதவரை நானும் சொல்லமாட்டேன். இதில் கவிதை கேட்டவர்களுக்காக என்று வேறு கூவியிருக்கிறீர்கள். பாவம் அவர்கள்.


    அல்லது நீங்கள் இரண்டும் கலந்த ஒரு பிறவியா?

    இல்லை.. தன் நிலைலைப்பாடு பற்றி கூறாததால் நீங்கள் ஒரு நேர்மையான விமர்சகர் அல்ல.
    கேட்டதனால் கவிதை எழுதுவதால் நீங்கள் கவிஞரும் அல்ல.

    நீங்கள் ஒரு வாசகரா?

    ஆம். நீங்கள் ஒரு நல்ல வாசகர். அவ்வளவே.

    நான் உங்களிடம் எப்பொழுதும் கேட்க விரும்பாத ஒரு கேள்வி “ நீங்கள் யார்..” என்ற கேள்வியே என்பதுடன்
    //கவிதையில் கனவு என்பது நெறிப்படுத்தப்பட்ட சிந்தனையுமல்ல உணர்ச்சியுமல்ல.ஆனால் அது கனவு சாராத தடையற்ற தொடர்புகள் ஆகும். கனவில் உள்ள தொடர்புகள் தனிப்பட்டவை. கனவௌ காண்பவரது தனிப்பட்ட வாழ்வின் அடிப்படையில்தான் அதனைப் புரிந்து கொள்ள வேண்டும். கனவுக்குரிய ரகசிய விதி கனவுச்செயல் ஆகும். கவிதையில் உள்ள அதர்க்கம் கனவில் உள்ளதைப் போன்று இருக்கிறது. அதன் படிமங்களை உணர்ச்சி சார்ந்த விதிகளால் விளக்க முடிகிறது. ஆனால் கவிதை உணர்ச்சியானது நெறிப்படுத்தப்பட்ட ஒன்று. இது சமூக தன்முனைப்பால் கட்டுப்படுத்தப்படுகிறது. கவிதையில் உள்ல கூட்டமைப்புகள் சம்பந்தப்பட்ட கவிஞரின் உள அமைப்பே. கனவு காண்பவரோ அதற்கேயுரிய படிமங்களுக்குள்ளேபுற யதார்த்ததை தவிர்த்துவிட்டு இருக்கிறார். இதே போன்று கவிதையைப் படிப்பவர் அதன் சொற்களுக்குள்ளேயே ஆழ்ந்து விடுகிறார்// இதை உங்களால் விளக்க முடியுமா என்றும்


    //சிந்திப்பதைப் போல ஒழுக்கம் கெட்ட காரியம் வேறெதும் இல்லை// என்று எழுதிய பெண் கவிஞரின் பெயரை சொல்லமுடியுமா என்றும்
    //மனித சமூகம் வளரும்பொழுது, கவிதை தன்னை சடங்குகளிலிருந்து பிரித்துக்கொள்கிறது. நாகரீமடைந்த மனிதன் உளவியல் ரீதியான உள்வாங்குதலை எளிதில் செய்கிறான். கவிதையின் சந்தமே அவனுக்குப் போதுமானது. வார்த்தைக் கூட்டுகளின் முக்கியத்துவம் சகமனிதர்களுடன் அவனை மிக எளிதில் உறவுகொள்ள வைக்கிறது. வார்த்தைக்கும் கவிஞனுக்கும் இருக்கும் உறவைப் பொருத்தே கவி கைகூடுகிறது. தன் அகந்தையில் எழுதும் ஒரு படைப்பு கவிஞனின் வார்த்தைகளை பிணம் சுமப்பது போல் சுமந்துகொண்டிருக்கும். கவிதை அகந்தைக்கு எதிரானது, உண்மையில் அகந்தையைச் சுட்டியொழிப்பது. ஆனால் அகந்தையை அகந்தையால் அறிவது. இத்தகைய கவிஞனே நிகழ்காலத்தில் வாழ்கிறான். அவனுக்கு வளம்பொருந்திய இறந்த காலமும், வருங்காலமும் தன்னைத் திறந்து கொடுக்கிறது. இந்தக் கருதுகோள் எவ்வளவுதான் கவர்ச்சிகரமானதாக இருந்தாலும் இதன் அடிப்படையில் நாம் அஸ்திவாரத்தை அமைத்துவிடமுடியாது. மேலும் இது நிரூபணம் செய்ய முடியாத அளவிற்கு உள்ல ஒன்றாகும். நமக்கு முடிந்ததெல்லாம் ஒரு வகைப்பட்ட உணர்ச்சிகர மொழியில் இருந்து. எழுதப்பட்ட நவீன இலக்கியம் உருவாயிற்று என்ற பொதுவகைப்பட்ட ஒன்றுதான். இந்த உணர்ச்சிகரமான மொழியை அடைந்தது என்பது முதலில் அனைத்து பாரம்பரிய இலக்கிய அமைப்புக்களையும் உள்ளடக்கியதாக இருந்தது. நவீனம் வளரும்பொழுது அதற்கென்ற இடத்தோடு நின்றது//

    என்று தாங்கள் எழுதியதில் உள்ள ஒரு பொது நேர்மை உங்களை முன் வைப்பதில் ஏன் இல்லை என்கிற எனதான ஆச்சர்யத்திற்கு உங்களின் பதிலென்ன என்பதையும் அறிய ஆவலாய் உள்ளேன்.

    என்ன இருந்தாலும் உங்களை பாராட்டியே தீரவேண்டும். முக நூல் கவிஞர்களின் கட்டுப்பட்டித் தனமான அகந்தையை நோண்டிவிட்டதற்காக. விமர்சனம் என எதையும் தாங்கவொண்ணா அவர்களின் பலவீனத்தையும் அதன் மூலமாக அவர்களது பயங்கரவாதத்தனத்தை எடுத்துக்காட்டியதற்கும்.

    அய்யா, நீங்கள் எதிர்வினை ஆற்றலாம். ஆற்றாமலும் போகலாம். என் சந்தேகங்களை தீர்க்கலாம். தீர்க்காமலும் போகலாம். எனென்றால் நீங்கள் தீர்த்தமுனி.. தீர்த்த…. முனி.

    நன்றி
    தோழமையுடன்
    ஆதிரன் (sirumiadhira@gmail.com)

    ReplyDelete